2026 ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம்..?
Kilampakkam Railway Station to be operational in January 2026
கோயம்பேட்டில் இருந்த பேருந்து நிலையத்தை தமிழக அரசு பேருந்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் 80 சதவீத அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
தினமும் 1.3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இங்கு புறநகர் ரெயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரெயில் சேவை இல்லாமல் உளது. இதனால், பஸ் நிலையம் வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அங்கு புதிய ரெயில் நிலையம் கட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி, கடந்த ஜனவரி 2024-இல் ரயில்வேக்கு என 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மார்ச் 2024 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில, ஜனவரி 2025க்குள் ரயில் நிலையம் செயல்படத் தொடங்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து அவர் பேசியதாவது;

'கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தைப் பொறுத்தவரை, ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, நடைமேடையின் மேற்கூரை அமைக்கும் பணிகள், பிரம்மாண்டான நடைபாதை மேம்பாலம் பணிகள் (Sky walk foot over) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தின் இறுதி பணிகள் நிறைவடைந்த பின்னர், 2026 ஜனவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.
அதேபோல, பறக்கும் ரெயில் திட்டம் 2 ஆண்டுகளில் நிறைவடையும். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கையெழுத்து பெற்று, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரெயில்வே சார்பாக 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Kilampakkam Railway Station to be operational in January 2026