தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: அமமுக ஆதரவை நாடும் அதிமுக; செப். 12-க்குப் பின் டிடிவி தினகரனைச் சந்திக்கத் திட்டம்!
AIADMK Seeks AMMK Support for Dharapuram and Madurantakam Bypolls Party Leaders Plan Meeting After Sept 12
வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில், அதிமுக தனது கூட்டணிக் கட்சிகள் மற்றும் தோழமை இயக்கங்களின் ஆதரவைத் திரட்டும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) ஆதரவைக் கோர அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, இவ்விரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சியிடம் (பாஜக) அதிமுகவின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, பாஜகவும் அதிமுகவுக்குத் தனது முழுமையான ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், எதிரணி வாக்குகளும், பாரம்பரிய அதிமுக வாக்குகளும் சிதறாமல் இருப்பதை உறுதி செய்ய அமமுகவின் ஆதரவையும் பெற அதிமுக வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக வரும் செப்டம்பர் 12-ஆம் தேதிக்குப் பிறகு, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால் காலியான இந்த இரு தனித்தொகுதிகளையும் மீண்டும் தக்கவைத்துக்கொள்ள அதிமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், பாஜகவை தொடர்ந்து அமமுகவுடனும் ஆதரவுப் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டிருப்பது தமிழக அரசியல் களவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
AIADMK Seeks AMMK Support for Dharapuram and Madurantakam Bypolls Party Leaders Plan Meeting After Sept 12