நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண முதலமைச்சர் விஜய் திட்டம்!
CM Vijay to Visit UK on Sept 10 to Attract Industrial Investments Likely to Attend Ajith Kumar Michelin Le Mans Cup Car Race in London
தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தொழில்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த லண்டன் பயணத்தின் போது, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த முன்னணித் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, லண்டனில் வரும் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரபல 'மிச்செலின் லீ மேன்ஸ் கப்' (Michelin Le Mans Cup) சர்வதேசக் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கார் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர் அஜித்குமார் போட்டியாளராகக் களம் இறங்குவதால், முதலமைச்சரின் லண்டன் பயணமும் கார் பந்தய நிகழ்வும் ஒரே நேரத்தில் அமைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், இளைஞர்களின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் புதிய 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) உருவாக்கப்படும் என்றும், ஃபார்முலா 1, 2, 3 மற்றும் 4 உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளை நடத்தும் வகையில் தரமான பந்தயத் தடங்களும் பயிற்சி மையங்களும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். தமிழக அரசின் இந்த மோட்டார் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நடிகர் அஜித்குமார் முன்னதாக தனது பகிரங்க நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
CM Vijay to Visit UK on Sept 10 to Attract Industrial Investments Likely to Attend Ajith Kumar Michelin Le Mans Cup Car Race in London