ரூ.200 கோடி ஆஃபரை நிராகரித்த ‘டாக்ஸிக்’ படக்குழு? இப்போது ரூ.30 கோடிக்கு வந்த ஓடிடி டீல்.. அதிர்ச்சியில் யாஷ் ரசிகர்கள்!
Did the Toxic film team reject a 200 crore offer Now an OTT deal worth 30 crore has surfaced Yash fans are shocked
பான் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை தொடர்பாக தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் வெளியாவதற்கு முன்பு கிடைத்த மிகப்பெரிய ஓடிடி ஆஃபரை படக்குழு நிராகரித்ததாகவும், தற்போது அதைவிட பல மடங்கு குறைவான தொகைக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் யாஷ் நடிப்பில், நடிகை மற்றும் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியானது.
சாக்னில்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ‘டாக்ஸிக்’ திரைப்படம் இதுவரை உலகளவில் சுமார் ரூ.338 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் மட்டும் ரூ.293 கோடி வசூலித்துள்ளதாகவும், ரூ.300 கோடி என்ற மைல்கல்லை எட்ட இன்னும் சுமார் ரூ.7 கோடி மட்டுமே தேவைப்படுவதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், படத்தின் வசூல் குறித்து வெளியாகும் புள்ளிவிவரங்களில் மாறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ‘டாக்ஸிக்’ படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவலாக காணப்படுகின்றன.
‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இருந்தபோதிலும், இவர்களின் கதாபாத்திரங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.
மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள வயது வந்தோருக்கான காட்சிகள் குறித்தும் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக ‘கேஜிஎஃப்’ படங்களில் யாஷை ரசித்த ரசிகர்கள், அவரிடம் எதிர்பார்த்திருந்த வேறுபட்ட படமாக ‘டாக்ஸிக்’ அமையவில்லை என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தின் ஓடிடி உரிமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. ‘பாலிவுட் ஹங்காமா’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, படம் வெளியாவதற்கு முன்பே முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க ரூ.200 கோடி வரை ஆஃபர் செய்ததாக கூறப்படுகிறது.
முதலில் ரூ.150 கோடியில் தொடங்கிய பேச்சுவார்த்தை பின்னர் ரூ.200 கோடி வரை சென்றதாகவும், ஆனால் படத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அந்த ஆஃபரை படக்குழு ஏற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்குகளில் படம் வெளியான பிறகு வசூல் சாதனை படைக்கும் என்றும், அதன்பின்னர் ஓடிடி உரிமையை இன்னும் அதிக விலைக்கு விற்க முடியும் என்றும் படக்குழு எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால், படம் வெளியான பின்னர் நிலைமை மாறிவிட்டதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பும் வசூலும் கிடைக்காத நிலையில், தற்போது அதே ஓடிடி நிறுவனம் சுமார் ரூ.30 கோடி மட்டுமே ஆஃபர் செய்துள்ளதாக ‘பாலிவுட் ஹங்காமா’ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.200 கோடி வரை சென்றதாக கூறப்படும் ஆஃபர் தற்போது ரூ.30 கோடியாக குறைந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ‘டாக்ஸிக்’ படக்குழுவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின்படி, ‘டாக்ஸிக்’ படத்தின் ஓடிடி உரிமை தொடர்பான இறுதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என கூறப்படுகிறது. பல்வேறு ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ரூ.200 கோடி ஆஃபர் உண்மையிலேயே நிராகரிக்கப்பட்டதா, தற்போது ரூ.30 கோடி மட்டுமே ஆஃபர் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ‘டாக்ஸிக்’ படக்குழு தரப்பில் இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனால், ஓடிடி உரிமை விவகாரத்தில் அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப்பட உள்ளது என்பதுதான் தற்போது திரையுலக வட்டாரங்களில் பேசப்படும் விஷயமாக உள்ளது.
English Summary
Did the Toxic film team reject a 200 crore offer Now an OTT deal worth 30 crore has surfaced Yash fans are shocked