தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு முக்கியமான அரசியல் சோதனையாக மாறியுள்ளது. ஆட்சி அமைந்து சுமார் நான்கு மாதங்களே ஆன நிலையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் கிடைக்கும் முடிவுகள் அரசின் செயல்பாடுகளுக்கான மக்கள் ஆதரவின் ஒரு குறியீடாக பார்க்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
குறிப்பாக, சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக தோல்வியடைந்திருந்த நிலையில், இடைத்தேர்தல் மூலம் அந்தத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இதில் 5 தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்தத் தொகுதிகளுக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த விரும்பவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர் ஆகிய 5 தொகுதிகளைத் தவிர்த்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ம் தேதி முடிவுகள் வெளியாகின. அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறவில்லை.
தாராபுரத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட கௌரி சித்ரா, அதிமுக வேட்பாளர் சத்யபாமாவை விட 34,662 வாக்குகள் குறைவாகப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் எழில்மலை, அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை விட 7,194 வாக்குகள் பின்தங்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
ஆனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததன் காரணமாகவே தற்போது இடைத்தேர்தலுக்கான சூழல் உருவாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மையை தவெகவால் பெற முடியவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்துள்ள நிலையில், காலியாக உள்ள தொகுதிகளின் இடைத்தேர்தல் மூலம் சட்டப்பேரவையில் தனது பலத்தை மேலும் அதிகரிக்க தவெக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
எதிர்பார்த்தபடி 7 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படாமல், தற்போது இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது ஆளுங்கட்சிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.
இந்த வெற்றி வெறும் இரண்டு எம்எல்ஏ இடங்களைப் பெறுவது மட்டுமல்லாமல், புதிய அரசுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் அரசியல் குறியீடாகவும் பார்க்கப்படும் என கூறப்படுகிறது.
ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை தவெக அரசு வெளியிட்டுள்ளதாக ஆளுங்கட்சி தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
200 யூனிட் வரை இலவச மின்சாரம், 717 மதுக்கடைகள் மூடல், தாய்மாமன் சீர், அண்ணன் சீர், காலை உணவு திட்ட விரிவாக்கம், பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம், 3 விலையில்லா சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மேலும், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அரசு டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து பல்வேறு தரப்பினரும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுவது, டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் தொகை வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உள்ளிட்டவற்றையும் ஆளுங்கட்சி தனது சாதனைகளாக முன்வைக்கிறது.
அதேநேரத்தில், ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், மின்கட்டணத்தில் குளறுபடிகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
சட்டம்–ஒழுங்கு நிலை, காவிரி நீர் விவகாரம், காவல் நிலைய மரணங்கள் தொடர்பான நடவடிக்கைகள், நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
மேலும், சுமார் ரூ.6 கோடி செலவில் முதல்வர் அறை மறுசீரமைப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது, போதைப்பொருள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவையும் அரசுக்கு எதிரான விமர்சனங்களாக உள்ளன.
இதனால், தவெக அரசு சில முக்கியமான சாதகங்களை பெற்றிருந்தாலும், ஆட்சியின் ஆரம்பகட்டத்திலேயே பல்வேறு சவால்களையும் சந்தித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி உருவாகும் பட்சத்தில், எதிர்க்கட்சிகளுக்கு இடையே வாக்குகள் பிரிவது தங்களுக்கு சாதகமாக அமையும் என தவெக தரப்பு கணக்கிடுவதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெறுவது, ஆட்சிக்கு வந்த பின்னர் தவெகவின் அமைப்பு ரீதியான பலத்தையும் நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடைத்தேர்தலில் தவெக யாரை வேட்பாளராக நிறுத்தும் என்பதும் முக்கியமான கேள்வியாகியுள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது புதிய முகங்களை களமிறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்று பின்னர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
மொத்தத்தில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் இரண்டு தொகுதிகளுக்கான சாதாரண தேர்தல் என்பதைத் தாண்டி, முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு கிடைக்கும் முதல் முக்கியமான அரசியல் பின்னூட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளின் முடிவு, தவெக அரசின் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண்ணாக மாறுமா என்பதற்கு அக்டோபர் 9-ம் தேதி வெளியாகும் முடிவுகள் பதில் அளிக்கும்.