“திமுகவின் போலி பிம்பத்தை உடைப்போம்!” – சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை அறிக்கைகளை சுட்டிக்காட்டி விஜய் ஆவேசம் - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் நேற்று பதிலளித்தார். அப்போது, திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகளை சுட்டிக்காட்டி அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் அமலாக்கத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார்.

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த முதல்வர் விஜய், கடந்த வாரம் தான் குறிப்பிட்டிருந்த “மூன்று துறை சார்ந்த கோப்புகள்” குறித்தும் விளக்கம் அளித்தார்.

முதல்வர் விஜய் பேசுகையில், “கடந்த வாரம் நான் பேசும்போது, என் மேஜையில் மூன்று துறை சார்ந்த கோப்புகள் உள்ளன. அதை திறக்க வேண்டிய நேரத்தில் திறப்போம் என்று கூறினேன். அதற்கு எதிர்க்கட்சியினர் இப்போதே திறங்கள் என்று தெரிவித்தனர்” என்றார்.

தொடர்ந்து, 1970-களில் திமுக ஆட்சியின்போது வீராணம் திட்டத்துக்கான குழாய்கள் தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை விஜய் சுட்டிக்காட்டினார்.

“கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் இதே சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேசியுள்ளனர். அந்த அறிக்கை வெளியாகி தற்போது 50 ஆண்டுகளை எட்டியுள்ளது. பவள விழா கண்ட கட்சியின் பொன்விழா சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை” என விஜய் விமர்சித்தார்.

மேலும், அப்போதைய முதல்வர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆதாரம் தேவைப்பட்டால் சட்டப்பேரவை நூலகத்திலேயே அந்த அறிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அமலாக்கத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டிய விஜய், திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் குறிப்பிட்ட சதவீதம் வசூலிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“திமுக ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறை அளித்த 100 பக்க அறிக்கையில், நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேரடிப் பயனாளிகள் என அந்த அறிக்கை கூறுவதாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்தார்.

டாஸ்மாக் துறையுடன் தொடர்புடைய விவகாரங்களில் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் ஈடுபட்டதாக கூறிய அவர், ரத்தீஷ் என்பவர் ‘பவர் புரோக்கராக’ செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

“அவரது உத்தரவுப்படிதான் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி செயல்பட்டார் என அமலாக்கத்துறை தெரிவிக்கிறது. இந்த அரசு வந்தவுடன் அவர் துபாயில் போய் ஒளிந்துகொண்டார். இவர் யாருக்கு நெருக்கமானவர்? யாருடைய அறிவுரைப்படி செயல்பட்டார்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்” என விஜய் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டாஸ்மாக் பார்கள், போக்குவரத்து டெண்டர்கள் மற்றும் மின்வாரிய பணிகளில் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் முதல்வர் குற்றம்சாட்டினார்.

“இந்த இரண்டு துறை கோப்புகளைத் திறந்ததற்கே இப்படி என்றால், மற்ற துறை கோப்புகளைத் திறந்தால் எத்தனை பூதம் கிளம்புமோ தெரியவில்லை” என விஜய் கூறினார்.

திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், “திமுக இருக்கும் இடத்தில்தான் தப்பு நடக்கும். தப்பு நடக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும். திமுக என்னதான் அவதூறாகப் பேசினாலும், நாம் அவ்வளவு தரம் தாழ்ந்து பேசும் ரகம் கிடையாது. ஆனால், திமுகவின் போலி பிம்பத்தையும், பிராண்டையும் உடைப்போம்” என்றார்.

தனது ஆட்சி குறித்தும் முதல்வர் விஜய் பேசினார்.“நான் இந்த நாற்காலிக்காகவோ, அதிகாரத்துக்காகவோ வரவில்லை. மக்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்ய வேண்டும். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்றுதான் வந்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

மேலும், தனது உரையின் போது, “1967, 1977, 1982, 2026.. அண்ணா, எம்ஜிஆர், என்டிஆர், விஜய்” என குறிப்பிட்டார். “இறைவனும், இயற்கையும், மக்களும் நமது பக்கம்தான் எப்போதுமே இருப்பார்கள். அதனால் யார் என்ன முறைகேடுகள், என்ன வேலைகள் செய்தாலும் ஒன்றும் எடுபடாது. அந்த அன்புக்கு முன்னால் இவர்கள் தோற்பது உறுதி” எனவும் அவர் கூறினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று மொத்தம் 57 நிமிடங்கள் 42 விநாடிகள் உரையாற்றினார். பேச்சின் தொடக்கத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்ட அவர், சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆவேசமாக முன்வைத்தார்.

இதனிடையே, விஜய்யின் உரைக்கு பதிலளிக்க எதிர்க்கட்சியினருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் சட்டப்பேரவை நிகழ்வுகள் அரசியல் ரீதியாகவும் பரபரப்பாக அமைந்தன.

தமிழகத்தில் அமைந்துள்ள 17-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட்டும், மறுநாள் ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர், அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது.

இன்று போக்குவரத்து, மோட்டார் வாகனங்கள் தொடர்பான சட்டம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனுடன் தமிழக சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We will shatter the Dumb lucks false image Vijay speaks vehemently citing the Sarkaria Commission and Enforcement Directorate reports


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->