இடைத்தேர்தல் கேள்விக்கு நோ-கமெண்ட்ஸ்...! அறிவாலயத்தில் பேட்டி கொடுத்துவிட்டு வண்டியில் பறந்த மு.க.ஸ்டாலின்...!
No comments by election question MK Stalin flew away car after giving interview at Arivalayam
தமிழக சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய சில கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தி.மு.க.வினரின் கோரிக்கை இன்று பெரும் அமளியாக வெடித்தது. சபாநாயகர் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதையடுத்து, அவர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றும் நிலை ஏற்பட்டது.சட்டசபையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் பேசினார்.அப்போது, கட்சி நிதி பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது முதலமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக பேசினார்.
இந்தக் கருத்துகளுக்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய் தெரிவித்த கருத்துகளை சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி தி.மு.க. உறுப்பினர்கள் இன்று அவையில் குரல் எழுப்பினர்.இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த முடிவை ஏற்க மறுத்த தி.மு.க. உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது.அதன்பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.சபாநாயகர் இருக்கையைச் சுற்றி உறுப்பினர்கள் திரண்டு நின்றதால், அவை நடவடிக்கைகளில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.நீண்ட நேரமாக தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் உடனடியாக அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. உறுப்பினர்களில் சிலரை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இந்தச் சம்பவத்துக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகும் வகையில் மாறிவிட்டது” என்று தெரிவித்தார்.தொடர்ந்து, 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்தக் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளிக்காமல் காரில் புறப்பட்டுச் சென்றார்.
English Summary
No comments by election question MK Stalin flew away car after giving interview at Arivalayam