கடலூரில் கொடூரம்: 70 வயது மூதாட்டி அடித்துக் கொலை; மூக்கு, காதை அறுத்து நகையைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!
70-Year-Old Woman Murdered for Gain in Cuddalore Nose and Ears Severed by Robbers
கடலூர் மாவட்டம் திருப்பாப்பிரியூர் அருகே மார்க்கெட் நகர் ரயில் தண்டவாளம் பகுதியில் 70 வயது மூதாட்டி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலா (70) என்ற அந்த மூதாட்டி, திருவண்ணாமலையில் உள்ள நகைக் கடைகளின் வாசலில் நீர் தெளித்துத் துப்புரவுப் பணி செய்து வந்தார். இவர் திருப்பாப்பிரியூர் மார்க்கெட் நகர் ரயில் தண்டவாளம் அருகே உள்ள ஒருவரின் வீட்டு வாசலில் இரவில் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வழக்கம்போல நேற்று இரவும் அந்த வீட்டின் வாசலில் உறங்கிக் கொண்டிருந்த கலாவை, மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பாப்பிரியூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மூதாட்டியின் மூக்கு மற்றும் காது பகுதிகள் அறுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம் நகையைக் கொள்ளையடிப்பதற்காகவே இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது என்பதைப் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
மூதாட்டியின் மூக்கில் இருந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள், அவர் காதில் அணிந்திருந்த நகை போலியானது (கவரிங்) என்பதை அறிந்து அதைக் கழற்றி அங்கே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருப்பாப்பிரியூர் காவல்துறையினர், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
70-Year-Old Woman Murdered for Gain in Cuddalore Nose and Ears Severed by Robbers