தமிழகத்தில் மதுவிலக்கு... எடப்பாடி பழனிச்சாமியின் முதல் கையெழுத்து இதுதான் - செல்லூர் ராஜு!
ADMK TASMAC EPS
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மதுரையில் விநியோகித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கட்சியின் அதிரடித் திட்டங்களை இன்று அறிவித்தார்.
அதிமுகவின் 2026 'மெகா' வாக்குறுதிகள்: மதுரை முனிச்சாலை சந்திப்பில் அவர் வெளியிட்ட நோட்டீஸில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
மகளிர் உரிமை: பெண்களுக்கு மாதம் ₹2,000 நிதியுதவி.
இலவசப் பயணம்: பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம்.
அம்மா இல்லம்: அனைவருக்கும் தலைசாய்க்க இடம் தரும் 'அம்மா இல்லம்' திட்டம்.
வாகன மானியம்: இருசக்கர வாகனம் வாங்கப் பெண்களுக்கு ₹25,000 மானியம்.
வேலைவாய்ப்பு: 150 நாட்கள் வேலை உறுதித் திட்டம்.
டாஸ்மாக் ஒழிப்பு - வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கையெழுத்து:
திமுக அரசு மது விற்பனையை அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தைக்கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் சாடிய ராஜு, ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டார்:
"2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட இல்லாமல் செய்ய அனைத்து மதுபானக் கடைகளையும் மூடும் கோப்பில் தான் எடப்பாடி பழனிசாமி தனது முதல் கையெழுத்தைப் போடுவார்."
திமுக மீதான காரசார விமர்சனம்:
மின் கட்டண உயர்வால் மக்கள் மின்விசிறியை (Fan) போடக்கூட அஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், "அதிமுக 10 ஆண்டுகளில் 17 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்தது; ஆனால் திமுக 5 ஆண்டுகளில் ஒன்றைக் கூட உருவாக்கவில்லை" எனக் குற்றம் சாட்டினார்.
திமுகவின் 'விடியல்' என்பது மக்களுக்கு கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக சொன்னதை மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்யும் என உறுதிபடக் கூறினார்.