தேனியில் பயங்கரம்; கூலித்தொழிலாளியான மருமகனை வெட்டிக்கொன்ற மாமனார்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Father in law Hacks Son in law to Death in Theni
தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்துள்ள ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கத்துரை. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முனியாண்டி மகள் முத்துவுக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 08 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
கூலி வேலை செய்து வரும் சிங்கத்துரைக்கு மதுப்பழக்கம் உள்ளதால், தினமும் மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதனால் கணவனிடம் சண்டையிட்டு முத்து, தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சமாதானம் பேசப்பட்ட நிலையில், "இனிமேல் மது அருந்த மாட்டேன்" என கூறி சிங்கத்துரை தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனாலும், மீண்டும் மது அருந்திய நிலையில், நேற்று புதன் கிழமை இரவு மனைவியை அழைத்து செல்ல மாமனார் முனியாண்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஆத்திரத்தில் இருந்த மாமனார் முனியாண்டி, மகளின் வாழ்க்கையை கெடுத்தது மட்டுமல்லாமல், மீண்டும் மீண்டும் மதுபோதையில் வந்து தகராறு செய்வதாகக் கூறி, தனது மருமகனை வீட்டிலிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
அப்போது சிங்கத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த சின்னமனூர் போலீசார் கொலையாளியான மாமனார் முனியாண்டியைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father in law Hacks Son in law to Death in Theni