'எங்கள் மீனவர்களை மீட்டுத் தாருங்கள்'...! இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு எதிராக முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் அவசர வேண்டுகோள்...!
Recover our fishermen Indian Communists urgent appeal Chief Minister against anarchy Sri Lankan Navy
இராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, பறிமுதல் செய்யப்பட்ட உடைமைகளையும் மீட்டுத் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 22-07-2026 அன்று 469 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்துள்ளனர்.
இதில் 9 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன், அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மாலிக்தினார், கயாஸ், செந்தில், கிரித்திசன், பிரவீன், அருள்லயோலா, சவுரி வினோத்வின், தேவசகாயம் மற்றும் இன்பென்ட் பிரசாத் ஆகிய 9 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட உடைமைகளையும் மீட்டு வழங்க வேண்டும்.
இதற்காக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சரும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Recover our fishermen Indian Communists urgent appeal Chief Minister against anarchy Sri Lankan Navy