'இனிமே இங்க இடம் பத்தாது'...! - புது இடத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்...? தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பு...!
There no more room here Is Secretariat moving new location There excitement Secretariat area
தமிழக அரசின் நிர்வாக மையமாக விளங்கும் தலைமைச் செயலகம், சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ராணுவத்துக்குச் சொந்தமான இந்த வளாகத்தை பயன்படுத்துவதற்காக தமிழக அரசு வாடகை செலுத்தி வருகிறது.பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை வளாகத்தில் தலைமைச் செயலகம் இயங்கி வருவதால், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கான அலுவலக அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளில் கடும் இடநெருக்கடி நிலவி வருகிறது.

சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் விஜய் பயன்படுத்தும் அலுவலகப் பகுதிகளிலும், அதிகாரிகளின் அறைகளிலும் போதிய இடவசதி இல்லாத நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.மேலும், சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள் அமர்வதற்கான அறைகளும் குறுகியதாக இருப்பதால், நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் இடவசதி ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது 4 செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடநெருக்கடியை சமாளிப்பதுடன், வாஸ்து தொடர்பான சில மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதலமைச்சர் விஜய் புதிய இடமாற்றத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வரும் நாமக்கல் கவிஞர் மாளிகையிலும் போதிய இடவசதி இல்லை என்ற பிரச்சினை எழுந்துள்ளது.
அங்கும் இடநெருக்கடி தொடர்வதாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதனால் தலைமைச் செயலகத்தை முழுமையாக வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.இதற்காக கிண்டி கவர்னர் மாளிகைக்கு எதிரே உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தலைமைச் செயலகத்தை அமைக்கலாமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
அதேபோல், பட்டினப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தையும் மாற்று இடமாக பயன்படுத்தலாமா என ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.எனினும், இந்த இடங்கள் தலைமைச் செயலகத்திற்கு ஏற்றதாக இருக்காது என தெரிவிக்கப்பட்டதால், தற்போது மாற்று இடங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலும் தலைமைச் செயலகத்தை அமைக்கும் முயற்சி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது.
இடநெருக்கடியை கருத்தில் கொண்டு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சட்டசபையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2010-ம் ஆண்டு திறக்கப்பட்ட அந்த வளாகம், பின்னர் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பன்னோக்கு அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
இதையடுத்து தலைமைச் செயலகம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டது.அதன்பிறகு, ராணி மேரி கல்லூரி அருகே தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. ஆனால் அந்தத் திட்டமும் பின்னர் கைவிடப்பட்டது.இவ்வாறு ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன.
அந்த வரிசையில், தற்போது த.வெ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
There no more room here Is Secretariat moving new location There excitement Secretariat area