'ராகுல் சொன்னது இப்போ மாணவர்கள் குரல்'...! - நீட் பிரச்சனையில் அடுத்தகட்டப் புயல்... மாணிக்கம் தாகூர் அதிரடி பேட்டி...!
What Rahul said now voice students next storm NEET issue Manickam Thakur action packed interview
நீட் தேர்வு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மற்றும் தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பயிற்சி முகாமில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. பல்வேறு முக்கிய கருத்துகளை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். ஆகஸ்டு 1-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, சென்னை மாநகராட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கலீல் ரகுமான், செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்ததாவது,"நீட் தேர்வுக்கு எதிரான குரல் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தற்போது நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது. 2019-ம் ஆண்டிலேயே ராகுல் காந்தி நீட் தேர்வுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இதுபோன்ற உறுதியான வாக்குறுதியை பிரதமர் மோடி வழங்கியுள்ளாரா?அண்ணாமலையின் உள்கட்சி நடவடிக்கைகளால் பா.ஜ.க.வின் அரசியல் நிலை தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தங்களது ஆட்சி இருப்பதாக கூறும் மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களில் தங்களது உரிமைகளுக்காக போராடும் மாணவர்களை ஒடுக்க முயற்சிக்கிறது.
மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் பிரதமர் மோடி அரசுக்கு எதிரான மனநிலை வலுப்பெற்று வருகிறது.தமிழ்நாட்டில் எங்களது கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.
நீட் தேர்வு தொடர்பாக ராகுல் காந்தியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.ராகுல் காந்தி அளித்துள்ள இந்த வாக்குறுதியை தமிழக மக்கள் எப்போதும் மிகுந்த மதிப்புடன் பார்க்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடமும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார்.மத்திய அரசு ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் 152 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் எழுப்பி வந்த கேள்விகளை தற்போது மாணவர்களும் வெளிப்படையாக முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
மக்களின் ஆதரவுடன் ராகுல் காந்தியின் குரல் தொடர்ந்து வலுப்பெற்று வருவதை நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. மாணவர்களின் பிரச்சினைகளுக்காக அவர் மேற்கொண்டு வரும் விடாமுயற்சி பாராட்டுக்குரியது” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
English Summary
What Rahul said now voice students next storm NEET issue Manickam Thakur action packed interview