'அடுத்த மாதம் பரபரப்பு பஞ்சமில்லை'...! புதிய அவதாரத்தில் அண்ணாமலை... கொடி மற்றும் கட்சியின் பெயரை வெளியிட அதிரடி திட்டம்!
There will be no shortage excitement next month Annamalai new avatar Action plan reveal flag and party name
தமிழக அரசியலில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கும் முயற்சியில் முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அவர், அடுத்த மாதம் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். தேர்தல் பிரசாரத்திலும் அவர் எதிர்பார்த்த அளவில் தீவிரமாக ஈடுபடவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் பா.ஜ.க.வில் இருந்து விலகிய அவர், ஏற்கனவே செயல்பட்டு வந்த ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. முதல் நாளிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டு, அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 12-ந்தேதி பொள்ளாச்சியில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் அடுத்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக களமிறக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்டு மாதம் 3-வது வாரத்தில் புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படுவதுடன், கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 14-ந்தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் அடுத்தடுத்த வாரங்களில் நடைபெற உள்ளன.தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள், ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் கட்சியை வலுவான கட்டமைப்புடன் களமிறக்கும் பணிகளில் அண்ணாமலை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
There will be no shortage excitement next month Annamalai new avatar Action plan reveal flag and party name