நிர்வாகத் திறனற்ற CM ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற நான்கு ஆண்டுகள்! பட்டியல் போட்ட இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை 'ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி, நிதிப் பற்றாக்குறை, கடன் வாங்குவதில் முதலிடம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கேந்திரமாக மாறிய தமிழ் நாடு, தினசரி கொலைகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஸ்டாலின் மாடல் ஆட்சியில், நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லாததால், திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை தாமதம் ஆகின்றன. உதாரணமாக, விடியா திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன என்றும், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் ஒரு சொட்டு நீர்கூட தேங்காமல் வடியும் என்றும், முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், நகராட்சித் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேட்டி அளித்தனர்.

ஆனால், 2021 மற்றும் 2022 ஆண்டில் பெய்த சிறு மழைக்கே சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதுதான் நிதர்சனமான உண்மை. உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச் சாவடி முறைகேடுகள், மறு வாக்குப் பதிவு, அதிகாரிகள் மிரட்டப்படுதல் போன்றவை அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மாநில அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் தாமதம். உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு ஆகியவை மாநில வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளன. உதாரணமாக, கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றம் சுமார் பத்து மாத காலம் சென்னை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியதை அனைவரும் அறிவார்கள். சென்னை மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மெட்ரோ திட்டங்கள் போன்றவை நிதி நெருக்கடியால் தடைபட்டன. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்று வாய்ஜாலம் பேசிய ஸ்டாலின், அதில் 50 சதவீதம்கூட கொடுக்க முடியாதபடி பல நிபந்தனைகளை விதித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றது. தொடர் கொலைகள், ஜாதி மோதல்கள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிக்கும் முதியோர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல், கொலை செய்யப்படுதல் போன்ற சட்ட விரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

காவல் துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று திரு. ஸ்டாலின் கூறினாலும், குற்றங்களைத் தடுப்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக, நகரமாக மாற்றியது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சாதனை. கடந்த நான்கு ஆண்டுகளாக, போதைப் பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சென்னை, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் மற்றும் கடத்தல் அதிக அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப் பொருள் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. இவைகளைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இந்த அரசு வாய்ஜாலம் காட்டினாலும், அனைத்தும் ஏட்டளவிலேயே உள்ளது.

கொலைகள் மற்றும் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நான், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி இவற்றைப் பற்றி சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை எடுத்துக் கூறியும், இந்த அரசிடம் கடுமையான, உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. குறிப்பாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச் சாராய மரணம் இரண்டு முறை நிகழ்ந்தேறியதுதான் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை.

இந்த அரசின் மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை, குறிப்பாக அமைச்சர் ஒருவரே அளித்த பேட்டிக்கு இதுவரை எந்தவிதமான மறுப்பையும் திரு. ஸ்டாலினால் அளிக்க முடியவில்லை. நான், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஸ்டாலின் மாடல் அரசின் தவறுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியும், அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய மனப் பக்குவம் இல்லாத நிலையில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த நான்காண்டு கால ஆட்சியில், அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறிப்பாக, அத்திக்கடவு-அவினாசி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, குடிமராமத்துத் திட்டம், விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேர மின் சப்ளை, 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியது, அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் உட்பட 17 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஆரம்பித்தது, சுமார் 50 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றியது, பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மெட்ரோ நகரங்களில் முதலிடமாக சென்னையை தொடர்ந்து தக்கவைத்தது என்று எங்களது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு இதுபோல் ஒரு சாதனையை குறிப்பிட்டுக் கூற இயலுமா?" என எடப்பாடி K. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS Condemn to DMK Mk Stalin Govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->