அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம் - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
ADMK BJP Alliance OPS
சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த இரு நாட்களாக ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் 38 மாவட்டங்கள் மற்றும் தலைமைக்கழகச் செயலாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் தேர்தல் திட்டங்கள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள எம்.ஜி.ஆர். தொடங்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுகவுக்கு புகழளிக்கும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படும். அதற்காக அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்து பெற்றுள்ளோம். அடுத்த 15 நாள்களில் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களிடமும் கருத்து கேட்போம்,” என்றார்.
“இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளோம். கடந்த தேர்தலில் என் பெயரும் அந்தக் கூட்டணி பட்டியலில் இருந்தது. அமித் ஷா சந்திக்காதது வருத்தமளிக்கிறது. கூட்டணியின் தலைமை பற்றி அனைத்து கட்சிகளும் சேர்ந்து முடிவெடுப்போம்,” என்றும் கூறினார்.
ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு 3.42 லட்சம் ஓட்டுகளுடன் 2வது இடம் பிடித்ததாகவும், பல எதிர்ப்புகளைத் தாண்டி மக்கள் நம்பிக்கையால் வென்றதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். “தொண்டர்கள் இயக்கமே கட்சியின் வலிமை. அதிமுகவின் சக்திகள் ஒன்று சேரவேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறுகையில், “அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் எங்களை மீண்டும் சேர்க்கவேண்டும்” என்றார்.