“நீ இப்படியே இருந்தால்தான் எனக்கு பிடிக்கும்” – மறைந்த ரோபோ சங்கரை நினைத்து உருக்கமாக பேசிய பிரியங்கா!
I only like you if you stay like this Priyanka spoke fondly of the late Robo Shankar
மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ‘ருசி நேரம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது சமையல் திறமையை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது கணவர் ரோபோ சங்கரை நினைத்து உருக்கமான அனுபவத்தை பகிர்ந்த அவர் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ரோபோ சங்கர், டான்ஸ் ஷோக்களில் இருந்து சின்னத்திரையில் புகழ்பெற்று, பின்னர் தனுஷ் நடித்த மாரி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். அந்தப் படத்திலேயே அவரது காமெடி டைமிங் மற்றும் தனித்துவமான நடிப்பு பாராட்டைப் பெற்றது. அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்த ரோபோ சங்கர், குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.
இந்நிலையில் நடனக் கலைஞர் பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அவர், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இவர்களின் மகள் இந்திரஜாவும் சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த ரோபோ சங்கருக்கு திடீரென உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு காரணமாக அவர் கொண்டிருந்த அதீத மது பழக்கம் குறிப்பிடப்பட்டது. நண்பர்களும், குடும்பத்தினரும் பெரும் சிரமத்துடன் அவரை மீட்டனர். அதன்பின் சங்கர் மது பழக்கத்திலிருந்து முழுமையாக விலகி, புதிய மனிதராக வாழத் தொடங்கினார்.
தொடர்ந்து சினிமாவிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்த அவர், ஒரு படப்பிடிப்பின் போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கியதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் திடீர் மரணம் அவரது ரசிகர்களையும், குறிப்பாக மனைவி பிரியங்காவையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது இறுதி ஊர்வலத்தின் போது சங்கரா என்று அழைத்துக் கொண்டு கண்ணீரில் தத்தளித்த பிரியங்காவின் காட்சி, அனைவரையும் கலங்கச் செய்தது.
தற்போது கணவரின் இழப்பிலிருந்து மெதுவாக மீண்டு வரும் பிரியங்கா, ‘ருசி நேரம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஒரு மனம் நெகிழவைக்கும் நினைவுகளை பகிர்ந்தார்.
அவர் கூறியதாவது:“நான் ஒரு டான்ஸர் தான். ஆனால் கொஞ்சம் குண்டாக இருந்தேன். எனது அப்பா, அம்மா, நண்பர்கள் எல்லோரும் ‘நீ நல்ல டான்ஸர், ஆனால் குண்டாக இருக்கியே’ என்று எப்போதும் சொல்லுவார்கள். ஆனால் என்னை ஒருபோதும் குறை சொல்லாதவர் ரோபோ சங்கர் தான்.அவர் எப்போதும் ‘நீ இப்படியே இருந்தால்தான் எனக்கு பிடிக்கும். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே. உனது குணம், உனது அழகு இப்படித்தான்’ என்று சொல்லுவார்,” என்றார்.
அவரது இந்த வார்த்தைகள் பலரது இதயத்தையும் தொட்டுள்ளன. சமூக வலைதளங்களில் ரசிகர்கள்,“இப்படி ஒரு மனசுடையவர் தான் ரோபோ சங்கர்,”“அவரை நினைத்து இன்னும் வருத்தமாக இருக்கிறது,”என்றுபலர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
பிரியங்காவின் இந்த உருக்கமான பகிர்வு, ரோபோ சங்கர் ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை அந்த நகைச்சுவை நட்சத்திரத்தின் மனிதநேயம் மற்றும் குடும்ப பாசத்தை நினைவூட்டியுள்ளது.
English Summary
I only like you if you stay like this Priyanka spoke fondly of the late Robo Shankar