மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதற்றம்: டெல்லியில் 80 சர்வதேச விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவஸ்த்தை..!
80 international flights cancelled in Delhi due to ongoing war tensions in the Middle East
அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்ட இணைந்து ஈரான் மீது நேற்று முன்தினம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வான்வெளி தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த சனிக்கிழமை அன்று கொல்லப்பட்டார்.
இதனால் போர் சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.

இதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு நாடுகள் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 80 சர்வதேச விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 36 விமானங்களும், வரவேண்டிய 44 விமானங்களும் ரத்தாகியுள்ளன.

இதில், மத்திய கிழக்கில் உள்ள எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் தங்களது விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீண்டும் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கடந்த 03 நாளில் இந்திய விமான நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை ரத்துசெய்துள்ளது.
English Summary
80 international flights cancelled in Delhi due to ongoing war tensions in the Middle East