அதிமுக கூட்டணியில் இணையப்போகும் கட்சிகள்... எடப்பாடி பழனிச்சாமி சொன்ன தகவல்!
ADMK BJP Alliance election 2026
ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி, சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாக இருக்கும் என்றும், கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர உள்ளதாகவும் தெரிவித்தார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் அவர் பேசுகையில், “ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள பகுதி. திமுக ஆட்சியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்துறை மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்” என்றார்.
ஆம்பூர் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதையும், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக பரப்புவது பொய்யானது எனவும் பழனிசாமி கூறினார். 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து சிறுபான்மையின மக்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் நினைவூட்டினார்.
ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கியதும் அதிமுக அரசே என அவர் சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்ததையும், பொய்யான வாக்குறுதிகள் அளித்ததையும் விமர்சித்தார். சென்னையில் 13 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், அவர்களை கைது செய்தது திமுக அரசின் கொடுமை என குற்றம்சாட்டினார்.
பாஜகவுடன் கூட்டணி இருந்தாலும் அதிமுக தலைமை வகிக்கும் என்றும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என்றும் அவர் உறுதியளித்தார். அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்துக்கான கட்சி என வலியுறுத்திய அவர், 2026 தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.
English Summary
ADMK BJP Alliance election 2026