தொகுதி சென்று திரும்பியபோது அசம்பாவிதம்...! பின்னால் வந்த அமைச்சர் காரில் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி...!
accident occurred while returning from constituency young man hit by minister car coming from behind and died spot
சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ஜெகதீஸ்வரி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சட்டசபை விடுமுறையையொட்டி தனது தொகுதிக்கு சென்றிருந்த அவர், விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு வாகனத்தில் பயணம் செய்த நிலையில், அவருக்கு முன்னதாக எஸ்கார்ட் பாதுகாப்பு வாகனமும், பின்னால் அவரது சொந்த காரும் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், காட்டாங்குளத்தூர் அருகே சென்றபோது அமைச்சரின் சொந்த கார், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் இறையன்பு என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த காரை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரின் சொந்த கார் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
accident occurred while returning from constituency young man hit by minister car coming from behind and died spot