'யாரும் அவையை விட்டு ஓடக்கூடாது'...! உதயநிதி, எடப்பாடியின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் கொடுத்து வரும் பதிலுரை என்ன தெரியுமா...?
No one should run away from House Do you know what Chief Minister Joseph Vijay response Udhayanidhi and Edappadi allegations
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று பதிலுரை அளித்து வருகிறார். அவரது உரையைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் கரவொலி எழுப்பினர்.கடந்த 18 நாட்களாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக, கடந்த 3-ந்தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதனால் சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 116 நாட்களில் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். அரசின் பல்வேறு அறிவிப்புகளை விமர்சித்த அவர், கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த நிலையில் குறுக்கிட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை தெளிவான விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.மேலும், தான் சட்டசபையில் இல்லாத நேரத்திலும் யார் என்ன கேள்விகளை எழுப்புகிறார்கள் என்ற தகவல் தனக்கு வந்து சேரும் என்றும், அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில் அளிப்பேன் என்றும் கூறினார்.
அத்துடன், எதிர்க்கட்சியினரிடம் ஒரு உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாகவும், பதில் அளிக்கும் நேரத்தில் யாரும் எழுந்து வெளியேறிவிடக்கூடாது என்றும் கூறிவிட்டு சட்டசபையில் இருந்து வெளியேறினார்.மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது.
இதையடுத்து காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை அளிக்கத் தொடங்கினார். அவர் உரையை தொடங்கியபோது த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
தனது பதிலுரையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கூறியதாவது,“ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் காவல்துறை முக்கியமான அடித்தளமாக விளங்குகிறது. மாநிலத்தில் அமைதி நிலவினால்தான் முன்னேற்றம் சாத்தியமாகும். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் மட்டுமே தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
English Summary
No one should run away from House Do you know what Chief Minister Joseph Vijay response Udhayanidhi and Edappadi allegations