மயிலாடுதுறையில் பிரம்மாண்ட வரலாற்று கண்டுபிடிப்பு..! அர்த்த மண்டப தூணில் பொறிக்கப்பட்ட சோழர் காலத்து தமிழ் கல்வெட்டு...!
huge historical discovery Mayiladuthurai Tamil inscription from Chola period engraved pillar Artha Mandapa
மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவினர் அண்மையில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இதுவரை பதிவு செய்யப்படாமல் இருந்த, சோழர் கால வரலாற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அரிய கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது.

கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள தூண் ஒன்றில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்து வடிவில் அமைந்துள்ள அந்தக் கல்வெட்டில், சிவபெருமானுக்கு அமுது படைப்பதற்காக தங்கம் தானமாக வழங்கப்பட்ட செய்தி இடம்பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இதுகுறித்து கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் தெரிவித்ததாவது,"கோவிராஜ கேசரிவர்மனான முதலாம் ராஜராஜ சோழனின் 18-வது ஆட்சியாண்டான கி.பி. 1003-ல் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
உய்யக்கொண்டார் வளநாட்டில் அமைந்திருந்த பிரம்மதேயமான திருவழுந்தூர் மகாசபையினர், திருக்கடவுடை நாயனார் தெய்வத்திற்கு அமுது படைப்பதற்காக 21 கழஞ்சு தங்கத்தை அறக்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்த தங்கத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு, அமுது படைப்பதற்குத் தேவையான நெல்லையும், பிற பொருட்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழர் காலத்தில் கோவில் வழிபாடுகளுக்கும் அறப்பணிகளுக்கும் வழங்கப்பட்ட தானங்கள் குறித்த முக்கியமான வரலாற்றுத் தகவலை இந்த கல்வெட்டு வெளிப்படுத்துகிறது” என அவர் தெரிவித்தார்.
English Summary
huge historical discovery Mayiladuthurai Tamil inscription from Chola period engraved pillar Artha Mandapa