பெரம்பூர் தொகுதியில் ரூ.48 லட்சத்தில் விரிவான திட்ட அறிக்கை! விஜய்யின் பெரம்பூர் 2.0 பிளான்! துபாய் ஸ்டைல்! அடியோடு மாறும்!
A detailed project report worth 48 lakh for the Perambur constituency Vijay Perambur plan Dubai style A complete transformation
சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நீண்டகால நகர்ப்புற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்காக ரூ.48 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report - DPR) தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை வசதி, மழைநீர் வடிகால், நடைபாதைகள், குடிநீர் விநியோகம் மற்றும் வெள்ளப் பாதிப்பு போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு சவால்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பருவமழை காலங்களில் வெள்ளம், கழிவுநீர் தேக்கம் மற்றும் போக்குவரத்து சிக்கல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனுடன், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, கேப்டன் காட்டன் கால்வாயில் கழிவுநீர் தேங்குதல் உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தத் தொகுதியில், முதற்கட்டமாக 20 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் பணிகள், நடைபாதை அமைத்தல் போன்றவை தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த முறை அனைத்து பணிகளையும் ஒருங்கிணைந்த முறையில் ஒரே திட்டத்தின் கீழ் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் சாலை அகலப்படுத்துதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொடர்ச்சியான நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள், ஒழுங்குமுறை வாகன நிறுத்த வசதிகள், நவீன தெருவிளக்குகள், புதிய பூங்காக்கள், குடிநீர் வசதிகள் மற்றும் பருவமழை வெள்ளத்தை சமாளிக்கும் நவீன மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திட்ட அறிக்கையை தயாரிக்கும் ஆலோசனைக் குழுவில் நகர்ப்புற திட்டமிடல், சிவில் பொறியியல், போக்குவரத்து மற்றும் வடிவமைப்பு துறைகளில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிபுணர்கள் இடம்பெறவுள்ளனர். அவர்கள் ஜிஐஎஸ் (GIS) தொழில்நுட்பம் மற்றும் நேரடி கள ஆய்வுகள் மூலம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்து, வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்கள், கழிவுநீர் தேங்கும் பகுதிகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அதற்கான நிரந்தர தீர்வுகளை பரிந்துரைக்க உள்ளனர்.
மேலும், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்தும் வழிகளும் இந்த ஆய்வில் இடம்பெறவுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில், பெரம்பூர் தொகுதியில் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
A detailed project report worth 48 lakh for the Perambur constituency Vijay Perambur plan Dubai style A complete transformation