சட்டமன்ற தேர்தல் 2026; வாக்காளர்கள் வசதிக்காக 30 புதிய முயற்சிகள் அறிமுகம்; தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!
30 New Initiatives Introduced for Voter Convenience in the 2026 Assembly Elections
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2026 க்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே செல்போன்களை வைக்க பிரத்யேக வசதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், வாக்காளர்களின் வசதிக்காகவும் 30 புதிய முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களை எளிதாக அடையாளம் காண அவர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெற்று இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாக்கு செலுத்தும் போது வரும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 200 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் வேட்பாளர்கள் தங்களின் உதவி மையங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், ECINet செயலி மூலம் வாக்காளர்கள் தங்களின் பெயர் சரிபார்ப்பு, வாக்குப்பதிவு நிலவரம், வேட்பாளரை அறிந்து கொள்ளுதல் போன்ற 40 வகையான வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும் என்றும், சமூக வலைதளம் மூலம் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ்நாடு உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 17 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகக் செய்தியாளர்களிடம் கூறிய, தேர்தல் ஆணையர், 05 மாநிலங்களில் உள்ள 824 தொகுதிகளில் 2 லட்சத்து 19 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுநேரம், தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு தேர்தல் அலுவலர்கள் சிரமத்திற்கு மத்தியில் சென்று பணியாற்ற இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுமார் 08 லட்சத்து 50 ஆயிரம் காவலர்கள், துணை ராணுவ படை வீரர்கள் உட்பட மொத்தம் 25 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
அத்துடன், 20 நாடுகளின் தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் தேர்தலைப் பார்வையிட வரவுள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் மூலம் தகுதியற்ற யாரும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
30 New Initiatives Introduced for Voter Convenience in the 2026 Assembly Elections