1977 தேர்தல்: எம்.ஜி.ஆர் வெற்றி!திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுவது 1977 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். “ஒரு நடிகர் நாட்டை ஆள வேண்டுமா?” என்ற கடுமையான விமர்சனங்களையும் அரசியல் பிரச்சாரங்களையும் மீறி, நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக அந்த தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி திமுக 137 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு கருணாநிதி தலைமையில் திமுக பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் 1972ல் எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

1977 சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 130 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக வெறும் 48 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அந்த தேர்தலில் மற்ற கட்சிகளின் நிலைமை:

  • சிபிஐ – 5

  • சிபிஐ(எம்) – 12

  • ஜனதா கட்சி – 10

  • காங்கிரஸ் – 27

  • இந்திரா காங்கிரஸ் – 1

  • பார்வர்ட் பிளாக் – 1

எம்.ஜி.ஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு 43,065 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனதா கட்சி வேட்பாளர் முத்துவேல் சேர்வை தோல்வியடைந்தார். கருணாநிதி அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு 43,076 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலுக்கு முன்பாக திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து சர்க்காரியா கமிஷன் விசாரணை நடைபெற்றது. அதே நேரத்தில் பொதுமக்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அவரது திரைபடப் புகழ் மற்றும் சமூகப்பணிகள் காரணமாக அடிமட்ட மக்களிடையே வலுவான ஆதரவு உருவாகி இருந்தது.

“ஒரு நடிகர் நாட்டை ஆளலாமா?” என்ற திமுகவின் கேள்வியை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக சில பத்திரிகைகள்,
“அரசியலை தொழிலாகக் கொண்டவர்கள் மட்டுமே அரசியலில் இருக்க வேண்டும் என்றால் தேசம் முன்னேறாது”
என்று எழுதின.

1972 அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர்,
“நான் தான் திமுக” என்று சவால் விடுத்து பின்னர் தனியாக கட்சி தொடங்கினார். அந்த நேரத்தில் திமுகவிலிருந்து மிகச் சில தலைவர்களே அதிமுகவுக்கு சென்றிருந்தாலும், எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட புகழ் கட்சியை வேகமாக வளரச்செய்தது.

அதிமுக தொடங்கியபோது அதன் கொள்கை குறித்து கேட்கப்பட்டபோது எம்.ஜி.ஆர்,
“கேபிடலிசம், சோஷலிசம், கம்யூனிசம் மூன்றும் இணைந்ததே அண்ணாயிசம்”
என்று கூறினார். அது பல விமர்சனங்களையும் பெற்றது.

1971 தேர்தலில் 48.6% வாக்குகள் பெற்றிருந்த திமுக, 1977 தேர்தலில் 24.9% ஆக குறைந்தது. அதே நேரத்தில் புதிய கட்சியான அதிமுக 30.4% வாக்குகள் பெற்றது.

இவ்வாறு முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய அதிமுக, எதிர்பாராத அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதன் மூலம் எம்.ஜி.ஆர் தமிழக அரசியலில் ஒரு பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்து கோட்டைக்குள் முதல்முறையாக முதல்வராக அடியெடுத்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1977 Election MGR wins MGR made DMK scream AIADMK flag flew for 10 years after 77


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->