உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கடி அதிகரிப்பு! தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார்....! - தமிழகம் முழுவதும் கொந்தளித்த மகளிர் அணி...! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சையில் ஆற்றிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகக் குற்றம்சாட்டி தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசு தோல்வியடைந்ததாகவும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க அரசு தவறிவிட்டதாகவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், காவிரி டெல்டா பகுதியிலுள்ள ஆறுகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டுபோய் பாலைவனத்தைப் போன்று காட்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

தி.மு.க. ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது என்றும், தற்போதைய அரசின் நிர்வாகத் திறனின்மையால்தான் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.மேலும், சம்பா சாகுபடியின் எதிர்காலம் குறித்து விவசாயிகள் அச்சத்தில் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் ஆதரவு தேவைப்படுவதால், கர்நாடக காங்கிரஸ் அரசை விமர்சிக்க முதல்-அமைச்சர் விஜய் தயக்கம் காட்டுகிறார் என்றும் விமர்சித்தார்.

அதேபோல், மத்திய அரசை எதிர்க்க அச்சப்படுவதால் இதுவரை பா.ஜ.க. குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் பேசினார்.உதயநிதி ஸ்டாலினின் பேச்சில் முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதத்தை ஏற்படுத்தின.

இதையடுத்து, த.வெ.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவின் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது பதிவில், "சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரிய பொறுப்பின் மாண்பை உணராமல், தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசுவது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல. முதல்-அமைச்சர் பதவிக்குரிய மரியாதையையும், அதன் கண்ணியத்தையும் புரிந்துகொள்ளாமல் பேசுவது மிகவும் வேதனையளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "அவை நாகரிகமும், நாவடக்கமும் இல்லாத பேச்சுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எல்லை மீறி இழிவாக பேசுபவர்கள் அதற்கான அரசியல் பதிலை மக்களிடமிருந்தே பெறுவார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து, "எங்கள் தலைவர் தளபதியின் அரசியல் நாகரிகமும் பொறுமையும் எங்களை அமைதியாக இருக்கச் செய்கிறது. ஆனால், மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

உரிய நேரத்தில் அவர்கள் தக்க தீர்ப்பை வழங்குவார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தச் சூழலில், உதயநிதி ஸ்டாலின் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது.கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார், தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில், உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொளியை ஆதாரமாகக் கொண்டு உரிய விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள காவலர்கள் துறைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து த.வெ.க. மகளிர் அணி சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும், பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு அரசியல் பேச்சையும் ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi Stalin crisis increases tvk complaint National Commission Women Women team riots all over Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->