திருச்சி–மதுரை 11 நாள் நடைபயணம் நிறைவு…! - அரசியல் கருத்துகளை வெளிப்படுத்திய வைகோ!
11 day Trichy Madurai foot march concludes Vaiko expresses political views
திருச்சியில் கடந்த 2-ம் தேதி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, போதைப்பொருள் ஒழிப்பு, மத ஒற்றுமை, சமூக சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி “சமத்துவ நடைபயணம்” என்ற பெயரில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

திருச்சியிலிருந்து கிளம்பிய வைகோ, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களை கடந்து நடைபயணத்தை தொடர்ந்தார். அவருடன் துரை வைகோ எம்.பி., கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
தினமும் 15 முதல் 17 கிலோமீட்டர் வரை நடைபயணம் மேற்கொண்ட வைகோ, தனது வயதையும் உடல் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் பயணத்தை தொடர்ந்தார்.நடைபயணத்தின் போது நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வந்த வைகோவுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, 10-ம் நாளான நேற்று இரவு மேலூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதிக்கு அவர் வந்தடைந்தார். புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். அதன் பின்னர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் அந்த நாள் பயணத்தை அவர் நிறைவு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி வரலாற்று சிறப்பான வெற்றியை பெறும். தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். அரசியலில் சாதிக்கலாம் என சிலர் மணல் கோட்டைகள் கட்டுகிறார்கள். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகே முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து பேசிய துரை வைகோ, “82 வயதிலும் நடைபயணத்தை அறிவித்த வைகோவுக்கு மருத்துவர்கள் கூட ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர். ஆனால், அவர் அதனை ஏற்கவில்லை.
பயணத்தின் போது உடல் சிரமங்கள் இருந்தபோதும், தனது கொள்கைகளில் எந்த சமரசமும் செய்யவில்லை. அவரது தியாகத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. கடந்த கால பா.ஜ.க. தலைவர்கள் வைகோவை மதித்துள்ளனர். ஆனால் சிலர் அரசியல் வன்மத்துடன் விமர்சிப்பது ஏற்புடையதல்ல” எனக் கூறினார்.
இந்நிலையில், இன்று 11-ம் நாளான நிறைவு நடைபயணமாக ஒத்தக்கடையிலிருந்து மதுரை நகரை நோக்கி வைகோ தனது பயணத்தை தொடங்கினார். மாட்டுத் தாவணி பகுதியில் கட்சியினர் பெருந்திரளாக வந்து வரவேற்றனர். இதில் துரை வைகோ எம்.பி., புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் முனியசாமி, ஏர்போர்ட் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 11 நாட்களில் 150 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தை தொண்டர்களுடன் இணைந்து நடந்த வைகோ, இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் தனது சமத்துவ நடைபயணத்தை நிறைவு செய்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கு ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் சிறப்புரையாற்ற உள்ளார்.
English Summary
11 day Trichy Madurai foot march concludes Vaiko expresses political views