நடிகை போல உடல்வாகு வேண்டும்! மனைவியை பட்டினிபோட்டு கொடுமைப்படுத்திய கணவன் - போலீஸ் விசாரணை!
UP Husband torture case
உத்தரபிரதேசம் காசியாபாத் பகுதியை சேர்ந்த சிவம் உஜ்வால் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு அவர் ஷானவி என்ற பெண்ணை ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, தனது மனைவி நடிகை நோரா பதேகியைப் போல உடல் அமைப்பை பெற வேண்டும் என்று வற்புறுத்தி, தினமும் மூன்று மணி நேரம் கடுமையான உடற்பயிற்சிக்கு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
உடல் நலக்குறைவால் ஒருநாள் பயிற்சியில் தவறினால்கூட, ஷானவிக்கு சாப்பாடு தராமல் பட்டினி போட்டார். கையில் கிடைத்த பொருட்களால் அடித்தும், பல்வேறு விதமான துன்புறுத்தல்களும் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஆபாசப் படங்களை பார்த்து அதில் காட்டும் முறையில் உறவுக்கு கட்டாயப்படுத்தியதால், கரு கலைந்த சம்பவத்தையும் ஷானவி சந்தித்துள்ளார். இதனால் அவர் மனத்திலும் உடலிலும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், மாமியாரும் கூடுதலாக வரதட்சணை கோரி தினமும் கொடுமைப்படுத்தியதாக ஷானவி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் பெற்றோரிடம் புகலிடம் தேடி அழுதபடி தங்கி இருந்தார். ஆனால் பெற்றோர் சமாதானப்படுத்தி மீண்டும் கணவன் வீட்டிற்கு அனுப்பியபோதும், அங்கு வரதட்சணை கொண்டு வரச் சொல்லி விரட்டி விட்டனர்.
தொடர்ந்து துன்புறுத்தல்களை தாங்க முடியாத நிலையில் ஷானவி போலீசில் புகார் அளித்தார். கணவன் தனது விருப்பத்திற்கு விரோதமாக பல செயல்களில் ஈடுபடுத்தியதோடு, அடித்தும், பட்டினி போட்டும், அத்துடன் மாமியார் நகை, பணம் அடிக்கடி கேட்டு துன்புறுத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்தின்போது ரூ.24 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து துன்புறுத்தல் நடந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.