1 வருடமாக சித்தரவதை! தனியார் பள்ளி 9 வயது மாணவி தற்கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்!
rajasthan suicide private school
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இயங்கி வரும் நீர்ஜா மோடி பள்ளியில் நடந்த துயரச்சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி, 9 வயதான 6ஆம் வகுப்பு மாணவி அமய்ரா, பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். சம்பவத்திற்கான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமய்ரா கடந்த ஒரு ஆண்டாக சக மாணவர்களால் பாலியல் வக்கிரத்துடன் கூடிய வார்த்தைத் தொல்லை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். “நான் பள்ளிக்கு போக விரும்பவில்லை, தயவுசெய்து அனுப்பாதீர்கள்” என மகள் கூறிய ஆடியோ பதிவை தாய் ஷிவானி மீனா, வகுப்பு ஆசிரியருக்கு அனுப்பியிருந்தார். பலமுறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அமய்ராவின் தந்தை விஜய் மீனா கூறுகையில், “பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பின் போது சில மாணவர்கள் மகளை நோக்கி அவமானகரமான சைகைகள் செய்தனர். அதனால் அவள் பயந்து என்னை பின்னால் ஒளிந்தாள். இதை ஆசிரியரிடம் கூறியபோது, ‘இது இருபாலர் பள்ளி, பேசக் கற்றுக்கொள்ளட்டும்’ என்று அலட்சியமாக பதில் அளித்தார்,” என்றார்.
தற்கொலைக்கு முன்பு அமய்ரா தனது ஆசிரியரிடம் இரண்டு முறை பேசியது சிசிடிவி காட்சிகளில் தென்பட்டாலும், அவற்றில் ஒலி பதிவு இல்லை. சிபிஎஸ்இ விதிகளின்படி ஆடியோ பதிவு அவசியமென இருந்தும், அது ஏன் இல்லை என பெற்றோர் கேள்வி எழுப்பினர். மேலும், நான்காவது மாடியில் பாதுகாப்பு கிரில் அல்லது வலைகள் ஏன் இல்லையென உறவினர்கள் சாடினர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை பதில் அளிக்கவில்லை. சம்பவம் குறித்த அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக ஜெய்ப்பூர் டிசிபி ராஜர்ஷி ராஜ் வர்மா தெரிவித்தார்.
English Summary
rajasthan suicide private school