மகளைக் காக்கப் போராடிய தாய் படுகொலை...! நெடுவாசலில் நடந்த அதிகாலைக் கொடூரம்...!
Mother Murdered While Fighting Save Her Daughter Early Morning Atrocity Neduvasal
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில், திருமணத்திற்கு பெண் மறுத்த ஆத்திரத்தில் மகளைக் கடத்த முயன்ற கும்பலைத் தடுத்த தாய் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவரின் இரண்டாவது மனைவியின் தம்பி விவின், சுரேஷின் முதல் மனைவி காளியம்மாளின் மகள் சுபதர்ஷினியைத் திருமணம் செய்யப் பெண் கேட்டுள்ளார்.

இதற்கு காளியம்மாளும் அவரது மகளும் சம்மதிக்காத நிலையில், இன்று அதிகாலை தனது கூட்டாளிகளுடன் வந்த விவின், சுபதர்ஷினியை வலுக்கட்டாயமாகக் கடத்த முயன்றுள்ளார்.
அப்போது மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து தடுத்த தாய் காளியம்மாளை, அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த தகவலறிந்து வந்த வடகாடு காவலர்கள், காளியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய விவின் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க காவலர்கள் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother Murdered While Fighting Save Her Daughter Early Morning Atrocity Neduvasal