தப்பு தப்பான டேட்டா! CM விஜய்க்கு ஆதரவாகமாஸ்டர் மகேந்திரன் மீண்டும் சர்ச்சை பேச்சு! விளாசும் நெட்டிசன்ஸ்!
Flawed data Master Mahendran sparks controversy again by speaking in support of CM Vijay netizens slam him
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் முதலமைச்சர் விஜய் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது சமீபத்திய பேட்டி மற்றும் அதில் இடம்பெற்ற சில அரசியல் குறிப்புகள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம், முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசியதாகக் கூறி மாஸ்டர் மகேந்திரன் அளித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் அவரது கருத்துகளை விமர்சித்தனர். பின்னர், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனது புதிய படத்தின் புரமோஷன் பணிக்காக ஹைதராபாத்தில் இருந்தபோது செய்தியாளர்கள் அவரிடம் மீண்டும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மாஸ்டர் மகேந்திரன், "கடந்த 75 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. அந்த காலத்தில் செய்ய முடியாத விஷயங்களை, 35 நாட்களாக முதலமைச்சராக உள்ள விஜயிடம் உடனே செய்ய வேண்டும் என்று கேட்பது நியாயமல்ல. திருமணம் நடந்தவுடன் மறுநாளே குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதே; அதுபோல அரசுக்கும் செயல்பட கால அவகாசம் தேவை" என்று கூறினார்.
இந்தக் கருத்து வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் அவரது வரலாற்றுக் குறிப்பை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியா 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது; அதன்படி 75 ஆண்டுகள் என்ற கணக்கு சரியாக இல்லை என்றும், திமுக 1967-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது என்பதையும் குறிப்பிட்டு சிலர் அவரது கருத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
மறுபுறம், சிலர் அவரது பேச்சு அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு கால அவகாசம் தேவை என்பதையே வலியுறுத்தும் வகையில் இருந்ததாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக மாஸ்டர் மகேந்திரன் இதுவரை மேலும் எந்த விளக்கமும் வெளியிடவில்லை.
English Summary
Flawed data Master Mahendran sparks controversy again by speaking in support of CM Vijay netizens slam him