ஆசிய அலைச்சறுக்கு போட்டி 2025: வரலாற்றில் முதல்முறையாக பதக்கம் வென்ற அசத்திய இந்தியா..!
India wins first ever medal at Asian Surfing Championships
ஆசிய அலைச்சறுக்கு போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த இறுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஒருவர் முதன்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆசியன் அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் மாமல்லபுரத்தில் கடந்த 04-ஆம் தேதி முதல் ஆசிய அலைச்சறுக்கு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, குவைத், லெபனான், மலேசியா, இலங்கை, மாலத்தீவுகள் உள்பட 19 நாடுகளை சேர்ந்த 102 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நாள்தோறும் பல்வேறு சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை ஆண்களுக்கான ஓபன் இறுதி போட்டி தொடங்கியது. அலைச்சறுக்கு பலகை மூலமாக, இந்தியா, கொரியா, இந்தோனேசியா நாடுகளை சேர்ந்த 04 வீரர்கள் பல்வேறு சாகசங்கள் கடலில் நிகழ்த்தினர். இறுதியில், கொரியா நாட்டை சேர்ந்த கனோவா ஹீஜே முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
02-ஆம் இடத்தை இந்தோனேசியாவை சேர்ந்த பஜர் அரியானா பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மீன்றவது இடத்தை, இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் புடிஹால் பிடித்து, வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். குறிப்பாக, ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் இந்திய வீரர் ஒருவர் பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
தொடர்ந்து, பெண்கள் ஓபன் பிரிவில் ஜப்பான் வீராங்கனை அன்ரி மாட்சுனோ முதலிடம் பிடித்து தங்க பதக்கமும், ஜப்பான் வீராங்கனை சுமோமோ சாடோ 02-ஆம் இடம்பிடித்து வெள்ளி பதக்கமும், தாய்லாந்து வீராங்கனை இசபெல் ஹீக்ஸ் 03-ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். குறித்த அலைச்சறுக்குப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 03 இடங்களை வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு வரும் 12-ஆம் தேதி மாலை பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர்.
English Summary
India wins first ever medal at Asian Surfing Championships