ஆந்திராவில் அதிர்ச்சி: ரூ. 1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மாமனாரைக் கொன்ற மருமகன்!
Andhra Father in law Murder for insurance
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த குரு நாராயணமூர்த்தி (54) என்பவர் டிசம்பர் 9ஆம் தேதி சாலையில் சடலமாகக் கிடந்தார். விபத்து என முதலில் கருதப்பட்ட இந்தக் கொலையின் பின்னணியில், இன்சூரன்ஸ் பணம் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேராசையின் விளைவு:
நாராயணமூர்த்தியின் உடல் காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், போலீசார் வழக்கை வேறு கோணத்தில் விசாரித்தனர். விசாரணையில், ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் பெயரில், எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து ரூ. 1.08 கோடி மதிப்புள்ள காப்பீட்டுப் பாலிசிகள் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த இன்சூரன்ஸ் தொகையை அடைவதற்காக, நாராயணமூர்த்தியின் மருமகன் சுன்கரி மற்றும் பேரன் சுன்கரி ஜோதி பிரசாத் ஆகியோர் அவரை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றது அம்பலமானது.
நான்கு பேர் கைது:
இன்சூரன்ஸ் தொகையைப் பெறும் பேராசையால் அரங்கேறிய இந்தக் கொலையை உறுதி செய்த போலீசார், மருமகன் மற்றும் பேரனைக் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையை மறைக்க உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குடும்ப உறுப்பினர்களே இன்சூரன்ஸ் பணத்துக்காகச் செய்த இந்தக் கொடூரக் கொலை, அனகப்பள்ளி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Andhra Father in law Murder for insurance