10 மாத குழந்தைக்கு பரிசாக கிடைத்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு!
andhra baby new home
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சங்கர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராம பிரம்மம் என்பவர், ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது பழைய வீடும் நிலமும் விற்க முடிவு செய்தார். ஆனால், பல நாட்கள் முயன்றும் வாங்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து, அவர் புதுமையான யோசனையுடன் முன்னேறினார்.
தனது வீட்டையும் நிலத்தையும் குலுக்கல் முறையில் வழங்க முடிவு செய்த ராம பிரம்மம், “ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு வீடும் நிலமும் பரிசாக” என்ற அறிவிப்பை நெடுஞ்சாலை ஓரத்தில் பேனர் மூலமாக வெளியிட்டார். இதைக் கேட்டு நூற்றுக்கணக்கானோர் ஆவலுடன் கூப்பன்கள் வாங்கினர்.
அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்யும் சங்கர் என்பவரும், தனது மனைவி பிரசாந்தி, மகள் சாய் ரிஷிகா மற்றும் 10 மாத குழந்தை ஹன்சிகா ஆகியோரின் பெயரில் நான்கு கூப்பன்கள் வாங்கினார்.
நேற்று நடைபெற்ற குலுக்கல் நிகழ்வில் நூற்றுக்கணக்கான கூப்பன்களில், சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்வு செய்யப்பட்டார். ரூ.500 மதிப்புள்ள சீட்டின் மூலம் ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடும் நிலமும் வென்ற அந்தக் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது.
இந்த அதிர்ஷ்ட நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, சிறுமி ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். “இது எங்கள் குடும்பத்துக்கு கடவுளின் பரிசு” என சங்கர் உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.