அதான் உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கே! ஏன் தாமதம்... தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த அவரின் அறிக்கையில், “சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில், அதன் கல்வி மற்றும் நிர்வாகச் செலவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் கணினி ஆய்வகம் அமைப்பதற்காக எனது தொகுதி மேம்பட்டு திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கி இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் அது செலவிடப்படவில்லை என்பதில் இருந்தே சென்னைப் பல்கலைக்கழகம் அதன் வளங்களை பயன்படுத்தாமல் சீரழிவை உணர முடியும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த கவுரி கடந்த 2023&ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். தேர்வுக்குழு அமைப்பது தொடர்பாக அரசுக்கும், ஆளுனருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 21 மாதங்களாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.

அரசுக்கும், ஆளுனருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவர்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தர் இல்லாத நிலையில், பட்டமளிப்பு விழா தாமதம் ஆனது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. பட்டச் சான்றுகளில் துணைவேந்தர் கையெழுத்து இல்லாததால் அந்தப் பட்டங்களை ஏற்றுக்கொள்ள பல பல்கலைக்கழகங்களும், நிறுவனங்களும் மறுத்து வருகின்றன.

இன்னொருபுறம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 200&க்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்து வாய்மொழித் தேர்வையும் நிறைவு செய்து விட்டனர். அதன்பின் பல மாதங்களாகியும் இன்று வரை அவர்களுக்கு முனைவர் பட்டச் சான்றுகள் இன்று வரை வழங்கப்படவில்லை.

வழக்கமாக ஒரு வாரத்தில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் பல மாதங்களாக வழங்கப்படாததால் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதற்குரிய பயன்களை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

பல்கலைக்கழகம் முடங்கிக் கிடப்பதால் அதன் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் வருவாய் ஆதாரங்களில் முதன்மை ஆதாரமாகத் திகழ்வது தொலைதூரக் கல்வித் திட்டம் தான். 2023&24ஆம் ஆண்டில் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் வாயிலாக பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடிக்கும் கூடுதலாக வருவாய் கிடைத்தது. 2024-25ஆம் ஆண்டில் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மாணவர் சேர்க்கை 10%க்கும் கூடுதலாக குறைந்து விட்டது. அதன்காரணமாக இனிவரும் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வருமானம் படிப்படியாக குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

துணைவேந்தர் இல்லாததால் சென்னைப் பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு நானே நேரடி சாட்சியாகும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைக்கு கணினி ஆய்வகம் அமைக்கப்பட வேண்டியத் தேவை இருப்பதை அறிந்த நான், அதற்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாள் கடிதம் வழங்கினேன்.

ஆனால், அந்த ஆய்வகம் அமைப்பதற்கு ரூ.16 லட்சத்து 98,500 ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நான், அதே தொகையை ஒதுக்கீடு செய்து 2023 பிப்ரவரி 6&ஆம் நாள் கடிதம் அளித்தேன். இந்த நடைமுறைகள் நிகழ்ந்த போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கவுரி அவர்கள் பணியாற்றி வந்தார்.

ஆனால், துணைவேந்தர் ஓய்வுபெற்று, அவருக்கு பதிலாக தற்காலிக நிர்வாகக்குழு பொறுப்பேற்ற பிறகு சமூகவியல் துறைக்கு கணினி ஆய்வகம் அமைக்கும் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. கடிதம் கொடுத்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது பெரும் கவலையளிக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் இப்போது கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அத்தகய சூழலில் கணினி ஆய்வகம் அமைக்க நிதி கிடைப்பது பெரும் வாய்ப்பு ஆகும். ஆனால், அதைக் கூட பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு பல்கலைக்கழகம் முடங்கிக் கிடக்கிறது.

பல்கலைக்கழகச் சட்டங்கள் தொடர்பான வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என அறிவித்துள்ளது. அதை பின்பற்றி சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Vice Chancellors post issue DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->