ஆங்கிலேயர்களைக் கூண்டோடு ஒழித்தவன்! யார் இந்த ஒண்டி வீரன்?! - Seithipunal
Seithipunal


பூலித்தேவனுக்கு நிறைய படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவன் ஒண்டி வீரன். தாழ்த்தப்பட்ட அருந்ததி இனத்தைச் சேர்ந்தவன். 

பூலித்தேவனின் போர் வாள் என்று ஒண்டி வீரனை அழைத்தார்கள். பூலித்தேவனை எப்படியும் வீழ்த்துவது என்ற நோக்கத்துடன், ஆங்கிலேயரின் படையினர் தென்மலை என்ற பகுதியில் முகாமிட்டிருந்தனர்

அந்நேரம், அந்தப் பகுதி மக்களிடையே தங்களது வீரத்தைப் பற்றிப் பீற்றிக் கொண்டு ஒரு சவாலையும் வைத்தார்கள் ஆங்கிலேயர்கள்.  

அதன்படி, “எங்களது பட்டாக்கத்தியை எடுக்க வேண்டும். பட்டத்துக் குதிரையையும் பிடித்துக் கொண்டு, எங்கள் முகாமில் உள்ள வெங்கலா நகரத்ததையும் யாராவது முழங்கச் செய்து விட்டால், நீங்கள் சுத்த வீரர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறோம். உங்களது பாளையத்தில் அப்படி யாராவது இருக்கிறீர்களா?" என்று சவால் விடுத்தார்கள்.

இதனை அறிந்த ஒண்டி வீரன், ஆங்கிலேயருக்கு பாடம் புகட்ட ஒரு திட்டம் தீட்டினான். அது பற்றி, பூலித்தேவனிடம் மட்டும் ரகசியமாக சொல்ல, அதற்க்கு பூலித்தேவன், “கும்பினியர் ஏதோ வஞ்சகத்தோடு, இப்படிச் சவால் விட்டிருக்கிறார்கள். இதற்காக நான் உன்னை இழக்கத் தயாரில்லை” என்று ஒண்டி வீரனின் திட்டத்திற்கு முதலில் மறுத்தான். 

ஆனாலும், ஒண்டி வீரன் பிடிவாதமாக இருக்கவே, அரை மனதுடன் சம்மதித்தான். தன் திட்டப்படி, ஒண்டி வீரன், தன்னை அனாதை என்று சொல்லிக் கொண்டு, ஆங்கிலேயரின் கூடாரத்திற்குச் சென்று, வேலை கேட்டுப் பெற்றான். 

அங்கிருக்கும்  சூழ்நிலையை நன்கு அறிந்து கொண்டான். சில நாட்களிலேயே, அவர்களது பட்டாக்கத்தி இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டான். ஆங்கிலேயரின் பட்டக் குதிரைக்குத் தீனி வைத்துக் கொண்டு, அதனைப் பாசத்துடன் பராமரித்தான். 

குதிரையும் நாளடைவில் அவனிடம் நன்றாகப் பழகத் துவங்கியது. தன் திட்டத்தை விரைவில் நிறைவேற்றவும் முடிவெடுத்தான். ஒரு நாள் இரவில், ஆங்கிலேயர் அதிகமாக மதுவை குடித்து விட்டு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். 

இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு, அவர்களது பட்டாக்கத்தியை எடுத்து, தன் இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டான் ஒண்டிவீரன். அடுத்து, பட்டத்துக் குதிரையை அவிழ்த்துக் கொள்ள எத்தனித்த போது, அந்தக் குதிரை திடீரெனக் கலவரம் அடைந்தது. 

ஒண்டிவீரன், அதனை அதட்ட, அந்தக் குதிரை, தன்னைக் கட்டி வைத்திருந்த முளைக்கம்பை இழுத்துப் பிடுங்கி விட்டு, ஓடத் துவங்கியது. பட்டத்துக் குதிரை ஓடும் சத்தம் கூடாரமெங்கும் கேட்டது. ஒண்டிவீரன், குதிரையின் காடிக்குள் ஒளிந்து கொண்டு, தன் மேல் புல்லைப் போட்டுக் கொண்டு, மறைந்து கொண்டான். 

குதிரையின் சத்தத்தைக் கேட்டு, காவல் வீரர்கள் விழித்துக் கொண்டார்கள். குதிரையைப் பிடித்து, மீண்டும், அதன் முளையைத் தரையில் வைத்து அடித்தார்கள். அப்போது, காடியில் ஒளிந்திருந்த ஒண்டி வீரனின் இடது கை தரையில் இருந்ததது. 

ஆதன் மேல் கொஞ்சம் புல் இருந்தது. அதனை அறியாத, ஆங்கிலேய வீரர்கள், போதையில், அவன் கையிலேயே அந்த முளையை அடித்துத் தரையில் இறக்கினார்கள். அந்த வலியை பொறுத்துக் கொண்டவன், வீரர்கள் சென்றதும்,  இடுப்பில் வைத்திருந்த பட்டாக்கத்தியால், தனது இடது கையையே வெட்டிக் கொண்டு, ரத்தம் சொட்டச் சொட்ட மரண வலியுடன், அவர்கள் வைத்திருந்த பீரங்கிகளின் திசையை அவர்கள் பக்கமே திருப்பி வைத்து விட்டு, பட்டத்துக் குதிரையின் மீதேறிக் கொண்டு, அவர்களது, வெங்கல நகராவை ஓங்கி அடித்து விட்டுத் தப்பிச் சென்றான்.

முரசொலி கேட்ட வீரர்கள், தங்களது முகாமிற்குள் எதிரிகள் நுழைந்து விட்டதாக எண்ணி, இருட்டில் பீரங்கியின் விசைச் சங்கிலிகளைப் பிடித்து இழுத்தனர். அந்த பீரங்கிகள் அவர்களையே தாக்கியதால், கூடாரத்தில் உள்ளவர்கள் தூள் தூளாகினர். 

இதற்கிடையே தப்பிவந்த ஓண்டி வீரன், பூலித்தேவனைப் பார்த்து, அவன் கையில் பட்டாக்கத்தியைக் கொடுத்து விட்டு, மயங்கி விழுந்தான். 

உடன் அவனுக்கு தக்க சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தான் பூலித்தேவன். அவனது தியாகமும், தீரச் செயலும், அவனை மெய் சிலிர்க்க வைத்தன. ஒண்டி வீரன் நன்கு குணமடைந்ததும், வெட்டுண்ட அவனது இடது கைக்குப் பதிலாக, தங்கத்திலே, செயற்கைக் கையைப் பொருத்தினான் பூலித்தேவன். 

கையை இழந்தும், சவாலில் வெற்றி பெற்று, ஆங்கிலேயர்களைக் கூண்டோடு ஒழித்தவன் என்ற ஒண்டி வீரனின் பெருமையை, இன்றும் அந்தப் பகுதியில் மக்கள் பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ondi veeran History


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->