தஞ்சையில் பயங்கர சதி...! துறவிக்காடு பகுதியில் வாலிபர் வீட்டை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்...பின்னணி என்ன...?
Mysterious individuals threw petrol bombs young man house Thoravikadu area what background
தஞ்சாவூர் மாவட்டத்தில் சண்டைக்கோழி வாங்கிய விவகாரத்தில் உருவான பகை உணர்வு, இளைஞரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவமாக மாறியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த அபின்தாஸ் (27) என்பவருக்கும், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துறவிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தனின் மகன் பாபு (21) என்பவருக்கும் சண்டைக்கோழி வாங்கிய விவகாரத்தில் கடந்த சில நாட்களாக கருத்து மோதலும் முன்விரோதமும் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்விரோதம் தீவிரமடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அபின்தாஸ் தனது ஆதரவாளர்கள் சிலருடன் துறவிக்காடு கிராமத்தில் உள்ள பாபுவின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது பாபுவை தேடி வந்த அவர்கள், அச்சுறுத்தும் நோக்கில் பாட்டில்களில் தயாரிக்கப்பட்ட இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீட்டின் மீது வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.வீசப்பட்ட குண்டுகளில் ஒன்று வெடித்து தீப்பற்றியதால், அந்த பகுதி முழுவதும் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
அதிர்ஷ்டவசமாக மற்றொரு பெட்ரோல் குண்டு வெடிக்காமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வெடிக்காமல் கிடந்த பெட்ரோல் குண்டை பாதுகாப்பாக கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த காவலர்கள், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான காரணம், இதில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர், முன்விரோதத்தின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் துறவிக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mysterious individuals threw petrol bombs young man house Thoravikadu area what background