இனி டிக்கெட் புக் செய்ய ‘நோ டென்ஷன்’...! முற்றிலும் புதுப்பொலிவுடன் களமிறங்கிய ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) புதிய இணையதளம்...!
Now No Tension Book Tickets IRCTC launches completely new website
இந்திய ரெயில்வே பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவை மேலும் விரைவாகவும் எளிமையாகவும் மாற்றும் நோக்கில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்திற்கு புதிய தோற்றமும், மேம்பட்ட வசதிகளும் கொண்ட பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம், பயணிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு விடை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரெயில்வே பயணிகள், இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் செயலி வாயிலாக தினசரி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, 82 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணையதளத்தின் மூலமே டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும், குறிப்பாக தட்கல் முன்பதிவு தொடங்கும் நேரங்களில் அதிகப்படியான பயனர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தை பயன்படுத்துவதால், சேவையக நெரிசல், தொழில்நுட்ப தடங்கல்கள் மற்றும் முன்பதிவு தோல்வி போன்ற பிரச்சினைகள் தொடர்ச்சியாக ஏற்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
மேலும், சிக்கலான பாதுகாப்பு சரிபார்ப்பு குறியீடுகள், தேவையற்ற அறிவிப்பு சாளரங்கள், அதிகமான செயல்முறை படிகள் போன்றவை முன்பதிவை சிரமமாக்கியதாகவும் பயணிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்களும் சென்றிருந்தன.இந்த நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய வடிவமைப்புடன் கூடிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவை மிக எளிமையாகவும், வேகமாகவும், தடையின்றியும் மேற்கொள்ளும் வகையில் இந்த புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.புதிய பீட்டா பதிப்பில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்பதிவின் போது தேவையற்ற பாதுகாப்பு சரிபார்ப்பு குறியீடுகள் நீக்கப்பட்டுள்ளதுடன், அடிக்கடி தோன்றும் தேவையற்ற அறிவிப்பு சாளரங்களும் அகற்றப்பட்டுள்ளன. கவனச்சிதறலை ஏற்படுத்தும் ஒளிரும் காட்சிகள் குறைக்கப்பட்டு, எளிமையான மற்றும் பயனருக்கு ஏற்ற வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் கிடைக்கிறதா என்பதை ஒரே பார்வையில் அறிந்து கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், விரைவான கட்டணச் செலுத்தும் நடைமுறையால் டிக்கெட் முன்பதிவை நிறைவு செய்ய வேண்டிய படிகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் அடிப்படை விவரங்களை பாதுகாப்பாக சேமிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் மீண்டும் தகவல்களை உள்ளிட வேண்டிய அவசியமின்றி அடுத்தடுத்த முன்பதிவுகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.புதிய பீட்டா பதிப்பை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் சிறப்பு இணைப்பு மூலம் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலும் இந்த புதிய பதிப்பிற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதிகளை பயன்படுத்திப் பார்த்த பிறகு, அதன் செயல்திறன் மற்றும் பயன்பாட்டு அனுபவம் குறித்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பகிருமாறு ரெயில்வே அமைச்சகம் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
புதிய மாற்றங்கள், எதிர்காலத்தில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு முறையை மேலும் நவீனமாகவும் பயனர்களுக்கு உகந்ததாகவும் மாற்றும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Now No Tension Book Tickets IRCTC launches completely new website