அணுமின் நிலைய ரகசியங்கள் லீக் விவகாரம் உண்மையா...? எழும் பெரும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த NPCIL ...!
Is nuclear power plant secrets leak true NPCIL puts end major doubts that arisen
இந்தியாவின் மிக முக்கியமான அணுசக்தி உற்பத்தி மையங்களில் ஒன்றான கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இணையத்தில் வெளியாகியதாக பரவிய தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில், தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் தற்போது இயங்கி வருகின்றன.

மேலும், இதே திறனில் செயல்படவுள்ள நான்கு புதிய அணு உலைகளின் கட்டுமானப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாட்டின் மின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் இந்த அணுமின் நிலையம், இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த சூழலில், 'வேர்ல்டு லீக்ஸ்' என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இணைய ஊடுருவல் குழு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள், உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களின் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை இணையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளதாக அறிவித்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் இணைய தளங்களிலும் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், இந்த தகவலுக்கு தேசிய அணுசக்தி அமைப்பு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அமைப்புகள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான எந்தவித ரகசிய தகவலும் வெளியேறவில்லை என்றும், இணையத்தில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்த மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர், இணையத்தில் வெளியாகியதாக கூறப்படும் தகவல்களுக்கும் அணுமின் நிலையத்தின் செயல்பாட்டு பாதுகாப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.
தரவு தொடர்பான இந்த விவகாரம் அணு உலைகளின் பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்கும் வகையில் இல்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
இதுதொடர்பாக என்.பி.சி.ஐ.எல். நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அளித்த விளக்கத்தில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும், பாதுகாப்பு சார்ந்த ரகசிய ஆவணங்கள் எதுவும் திருடப்படவோ அல்லது வெளியேறவோ இல்லை என்றும் தெரிவித்தார்.
இணையத்தில் பரவி வரும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என்றும், அணுசக்தி பாதுகாப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
English Summary
Is nuclear power plant secrets leak true NPCIL puts end major doubts that arisen