பெங்களூரில் காதலுக்கான தாயை கொலை செய்த மகள் உள்ளிட்ட 5 சிறார்கள் கைது!
Bangalore mother murdered daughter and boy friend Arrested
பெங்களூரு சுப்பிரமணியபுராவில் 36 வயது பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் மகள் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து, தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்த பெண் கடந்த மாதம் 26-ந்தேதி அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். முதலில் இது தற்கொலை என கருதப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென காணாமல் போனதால் சந்தேகம் மேலும் எழுந்தது. பின்னர் அந்த சிறுமி ராமநகர் மாவட்டத்தில் பாட்டி வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சம் கண்டது.
தன்னுடன் படித்த இளைஞனை காதலித்திருந்த அந்த சிறுமி, தாயார் அதை எதிர்த்து கண்டித்ததாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது காதலனும் மேலும் மூன்று நண்பர்களும் சேர்ந்து தாயை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
விசாரணையில், அந்த நால்வரும் சிறுவர்களாக இருந்தது, அவர்களில் ஒருவருக்கு வெறும் 13 வயது தான் என்பதும் தெரியவந்தது. கொலை நடந்த இரவில் தாய் தூங்கியபோது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், தூக்கில் தொங்க விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
போலீசார் இந்த கொலை வழக்கில் 17 வயது சிறுமி உட்பட 5 பேரையும் கைது செய்து, சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரு நகரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
English Summary
Bangalore mother murdered daughter and boy friend Arrested