மீண்டும் தொடங்கிய ‘அரசன்’படப்பிடிப்பு.. தடைகளை உடைத்த அரசன் சிம்பு! என்ன நடந்தது?
Arasan shooting resumes Simbu the king who broke barriers What happened
நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்புவும் வெற்றிமாறனும் முதல் முறையாக இணையும் இந்த கூட்டணி காரணமாகவே படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்தப் படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் கதைக்களத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற தகவல்கள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகின்றன. இதுகுறித்து முன்பே பேசிய வெற்றிமாறன், “இந்தக் கதையை வடசென்னை உலகத்துடன் இணைத்தும் சொல்லலாம், தனித்த கதையாகவும் சொல்லலாம்” என குறிப்பிட்டிருந்தார். இதனால் படத்தின் கதைக்களம் குறித்து ரசிகர்களிடம் கூடுதல் ஆர்வம் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தயாரிப்பு தொடர்பான சிக்கல்களால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு மீண்டும் முழுவீச்சில் பணிகள் தொடங்கியுள்ளன.
முன்னதாக வெளியிடப்பட்ட ப்ரோமோவில் சிம்பு இரண்டு விதமான தோற்றங்களில் காணப்பட்டிருந்தார். இதனால் படத்தில் அவருக்கு பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவானது. முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சிம்புவின் வேறுபட்ட தோற்றங்கள் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளன.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறனுடன் உரையாடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அந்தப் படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதேபோல், வெற்றிமாறனின் சமீபத்திய வெளியீடாக விடுதலை பாகம் 2 கடந்த 2024 டிசம்பரில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Arasan shooting resumes Simbu the king who broke barriers What happened