தொகுப்பாளராக களமிறங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
AR Rahman steps in as a host A surprise awaits fans
உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர், கோல்டன் குளோப், கிராமி உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்று இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ள அவர், தற்போது எதிர்பாராத புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர்.ரஹ்மான், குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இசைத்துறையில் பயணிக்கத் தொடங்கினார். இளையராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அவர், பின்னர் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார்.
இயக்குநர் மணிரத்னத்தின் ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் அவரது இசைப்பயணம் புதிய உச்சத்தை எட்டியது.
தொடர்ந்து தமிழ், இந்தி என பல மொழிகளில் இசையமைத்த ரஹ்மானுக்கு ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் கிடைத்தன. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக அவர் இசையமைத்த ‘ஜெய் ஹோ’ பாடல் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்திற்காக கோல்டன் குளோப், கிராமி மற்றும் ஆஸ்கர் உள்ளிட்ட முக்கிய விருதுகளையும் அவர் வென்றார்.
இதனால் இந்திய ரசிகர்களால் ‘ஆஸ்கர் நாயகன்’, ‘இசைப்புயல்’ என கொண்டாடப்பட்டு வரும் ரஹ்மான், தொடர்ந்து பல முன்னணி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் ‘லால் சலாம்’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு, அடுத்ததாக ‘ராமாயணம்’ உள்ளிட்ட படங்களிலும் அவரது இசை இடம்பெற உள்ளது.
இந்நிலையில், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வகையில் தொகுப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் களமிறங்க உள்ளார்.
சோனி லிவ் சார்பில் ‘சோனி விழா’ என்ற பெயரில் புதிய சேனல் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. அதன் ஒரு பகுதியாக ‘தமிழ் Idol’ என்ற இசை சார்ந்த நிகழ்ச்சி உருவாகிறது.
இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இசையமைப்பாளராகவும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவராகவும் ரசிகர்களை சந்தித்து வந்த ரஹ்மான், தற்போது தொகுப்பாளராகவே ஒரு நிகழ்ச்சியை முன்னெடுக்க இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
மேலும் இதே சேனலில் ஒளிபரப்பாக உள்ள ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் தொகுத்து வழங்கும் ‘தமிழ் Idol’ நிகழ்ச்சி இன்னும் சுமார் 70 நாட்களில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இசைப்புயலின் புதிய அவதாரம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
AR Rahman steps in as a host A surprise awaits fans