அத்திப்பட்டி கிராமமாவது தமிழக வரைபடத்தில் இருந்து காணாமல் போனது... இன்றைக்கு இந்திய வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும் தமிழகத்தின் ஒரு பகுதி..? - Seithipunal
Seithipunal

நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் ஆட்சியாளர்களின் சூழ்ச்சியினால் அத்திப்பட்டி என்ற கிராமம் தமிழக வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். ஆனால் நிஜத்தில் இன்று தனுஷ்கோடி என்ற அழகிய கடல் பரப்பையே இந்திய வரைபடத்தில் இருந்து நாம் இழக்க இருக்கிறோம். தனுஷ்கோடி மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகள் செய்து தரகோரி திருமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. இதையடுத்து தனுஷ்கோடியில் ஆய்வு செய்ய நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்னரே தனுஷ்கோடி மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாக அரசால் 1964ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயலுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்த புயல் மெல்ல மெல்ல பாக்ஜலசந்தி கடலில் மையம் கொண்டு 23ஆம் தேதி அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி வந்தது. இந்த புயலின் வெளிப்பாடாக மணிக்கு 280 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்தது. இந்த புயல்தான் தங்கள் வாழ்க்கையை புரட்டி போட உள்ளது என்பதை அறியாத மக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில் பாம்பன் - தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலும் ஒன்று. இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு முதலில் வரவேண்டும். அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் - கோஷன் என்ற கப்பலில் பயணித்து இலங்கையை அடையலாம். இது தவிர தனுஷ்கோடிக்கு வர விரும்பும் யாத்திரைவாசிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கி வந்தது. 23ஆம் தேதி நள்ளிரவு இந்த ரயில் தனுஷ்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தனுஷ்கோடியை அடைய சில நூறு அடி தூரமே இருந்த நிலையில் பலத்த காற்றுடன் மழையும் கொட்ட துவங்கியது. இதனால் தனுஷ்கோடிக்கு ரயில் வருவதற்கான அனுமதி சிக்னல் கொடுக்கப்படவில்லை. கடும் இருட்டில் மழையும் கொட்டியதால் ரயில் டிரைவரால் இந்த சிக்னலை பார்க்க முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில் தனுஷ்கோடியை நோக்கி செல்ல, அந்நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவு என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ரயிலில் பயணித்த 115 பேரும் பரிதாபமாக பலியாகினர். ஆழிப்பேரலையின் இந்த கோர தாண்டவம் பற்றிய செய்தி கூட இரு நாட்களுக்கு பின்னரே அரசு நிர்வாகங்களுக்கு தெரிய வந்தது. இதன்பின்னரும் தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்து போனது. இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்று கூட புயலுக்கு தப்பவில்லை. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில் ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல்நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 1800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். புயலின் கோரத்தை உணர்ந்த அரசு, தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living) அறிவித்தது. தனுஷ்கோடியில் வசித்த மக்களுக்காக புதிய வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர். கடல் கொண்ட தனுஷ்கோடி பகுதியில் குடிதண்ணீர், சாலை, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இன்றுவரை இல்லை. ஆனாலும் தனுஷ்கோடி கடலை தங்களை தாலாட்டும் தாயின் மடியாக கருதும் மீனவர்கள் இன்னும் அந்த மணற்குன்றுகளுக்குள் வாழ்வதையே வரமாக கருதி வசித்து வருகின்றனர்.  

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S



கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->