உலகம் பதட்டம்! ஈரான்-அமெரிக்கா போர் தீவிரம்...! தெஹ்ரானில் வான்வழி தாக்குதல்...! - 13 பேர் பலி
world nervous Iran US war intensifies Airstrike Tehran 13 people killed
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள பதற்றம், தற்போது முழுமையான போர் நிலையாக மாறி உலக கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தீவிரமடைந்த இந்த மோதலில், அமெரிக்கா தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வர, அதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த போரின் தாக்கமாக, உலகின் முக்கியமான கடல்சார் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, உலகளவில் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 15 அம்சங்களை கொண்ட ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும், இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஒப்படைக்க வேண்டும், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால், இந்த நிபந்தனைகளை ஈரான் மறுத்துள்ள நிலையில், ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளைக்குள் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், “நரகத்தின் வாயில்கள் திறக்கும்” என எச்சரித்ததுடன், ஈரானின் மின் கட்டமைப்புகள் மற்றும் முக்கிய பாலங்கள் இலக்காகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஈரானும் திடுக்கிடும் பதிலடி கொடுத்து, பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.இந்த சூழ்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து மர்மமான வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலை நடத்தியது அமெரிக்காவா அல்லது இஸ்ரேலா என்ற விவரம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.மேலும், தெஹ்ரானில் உள்ள ஷரீஃப் பல்கலைக்கழகத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததோடு, இயற்கை எரிவாயு விநியோகம் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
English Summary
world nervous Iran US war intensifies Airstrike Tehran 13 people killed