இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் அழிக்கப்பட்ட உச்சத் தலைவரின் விமானம்; ஈரானிய ஆட்சிக்கு பெரும் பின்னடைவு..?
Supreme Leaders Aircraft Destroyed in Israeli Air Force Strike
அணு ஆயுத போட்டி காரணமாக கடந்த 28 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்துகிறது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா காமேனி கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி தெஹ்ரானிக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதற்கு மீண்டும் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
கடந்த வாரம் ஈரானின் புதிய உச்சத்தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி பதவியேற்றார். ஆனால், நாங்கள் நடத்திய தாக்குதலில் அவரும் படுகாயம் அடைந்திருக்கிறார் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் தரப்பில் மொஜ்தபாவுக்கு சிறிய அளவிலான காயங்களே எனக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா காமேனி, உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் உள்நாட்டு, சர்வதேசப் பயணங்களுக்கு பயன்படுத்தி வந்த விமானங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அதாவது, ஈரானிய ஆட்சியின் மற்றொரு முக்கிய மூலோபாயச் சொத்து அகற்றப்பட்டுள்ளதாகவும், இது அவர்களின் ராணுவ மறுசீரமைப்புத் திறனைக் குறைக்கும் எனவும் இஸ்ரேலிய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஏற்கனவே, ஈரானின் 35 ஆண்டு காலமாக உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி ஒரே நாள் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் பயன்படுத்திய விமானமும் அழிக்கப்பட்டுள்ளது ஈரானிய ஆட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
English Summary
Supreme Leaders Aircraft Destroyed in Israeli Air Force Strike