'நீர் முதலீட்டுக்கான உலகளாவிய கவுன்சில்' உறுப்பினராக பிரதமர் மோடிக்கு அழைப்பு..!
PM Modi invited to be a member of the Global Council for Water Investment
உலகளவில் பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி மற்றும் நிதி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஜி - 20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, அமெரிக்கா என, 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த ஆண்டுக்கான தலைவர் பதவி தென் ஆப்ரிக்க நாட்டின் வசம் உள்ள நிலையில், இதன் அதிபர் சிரில் ராமபோசா, ஜி - 20 சார்பில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்காக நீர் முதலீட்டுக்கான உலகளாவிய கவுன்சிலை தொடங்கியுள்ளார்.
இந்த 'நீர் முதலீட்டுக்கான உலகளாவிய கவுன்சில்' என்ற அமைப்பில் உறுப்பினராக பிரதமர் மோடி மற்றும் பிற ஜி - 20 தலைவர்களுக்கு தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஜெர்மனி உள்ளிட்ட ஜி - 20 நாடுகளின் தலைவர்களுக்கும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து சிரில் ராமபோசா கூறுகையில், 'நீர் வளங்களில் முதலீடு செய்வது தொடர்பான விஷயங்களை இனி பருவநிலை மற்றும் நிதி விவாதங்களில் புறக்கணிக்க கூடாது என்றும், அது விவாதங்களின் மைய புள்ளியாக இருக்க வேண்டும் எனவும், அதற்கு நிதியளித்து, திட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், புதிதாக துவங்கப்பட்ட இந்த அமைப்பு, நீர் தொடர்பான விவகாரங்களில் உலகின் முதன்மையான அரசியல் மற்றும் முதலீட்டு மேடையாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு நிதி திரட்டும், ஆண்டு அறிக்கைகளை வெளியிடும் மற்றும் ஜி - 20, ஐ.நா., பன்னாட்டு வளர்ச்சி வங்கிகள் மற்றும் தனியார் துறையின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
PM Modi invited to be a member of the Global Council for Water Investment