ஜாமீன் ரத்து.. நடிகர் தர்ஷன் பெங்களூவில் கைது: சிறையில் சிறப்பு சலுகை கூடாது என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை..!
Kannada actor Darshan arrested in Bengaluru after his bail was cancelled
கர்நாடகாவில் ரசிகர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை, உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இதனை தொடர்ந்து, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களுக்கு சிறையில் சிறப்பு சலுகை கொடுக்க கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சி பாளையா போலீசாரால் கடந்த ஆண்டு 2024 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அத்துடன், நடிகை பவித்ரா கௌடாவுக்கும் இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கௌடா உள்பட 07 பேருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு மீதான விசாரணை ஜூலை மாதம் நிறைவு பெற்று, தீர்ப்பு அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தர்ஷனின் ஜாமீனுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, தர்ஷன் உட்பட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதோடு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இயந்திரத்தனமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கொலை குற்றவாளியான நடிகர் தர்சனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும், சாட்சிகளும் மிரட்டப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நடிகை பவித்ரா கௌடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிய ரசிகரை கொலை செய்த வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடிகர் தர்ஷனை பெங்களூருவில் போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்ட்டுள்ளார்.
English Summary
Kannada actor Darshan arrested in Bengaluru after his bail was cancelled