அயதுல்லா அலி காமேனி இறுதி ஊர்வலம்; 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரிழக்கலாம்; முன்கூட்டியே 1000 கல்லறைகளைத் தயார் செய்துள்ள ஈரான்..?
Iran has prepared 1000 graves for Ayatollah Ali Khameneis funeral procession
ஈரானில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச அதிகாரியாக விளங்கிய அயதுல்லா அலி காமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டதோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து, மத்திய கிழக்கில் போர் தீவிரமாக நீடித்ததால், காமேனியின் இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கான நிகழ்வு நேற்று (ஜூலை 04) ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள 'கிராண்ட் மொசல்லா' (Grand Mosalla) வளாகத்தில் காமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.முதல் நாலா நேற்று இறுதிச் சடங்குகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க கூடியிருந்தனர்.

காமேனியின் உடலின் இறுதிச்சடங்கு ஊர்வலம் புனித நகரமான கோம் (Qom) வழியாகச் சென்று, பின்னர் ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பலா நகரங்களுக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியாக மஷ்ஹத் (Mashhad) நகரில் வியாழக்கிழமையன்று சடங்குகள் நிறைவடைகின்ற நிலையில், அங்கு அவர் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நாட்கள் நடைபெறும் இந்த இறுதி ஊர்வலங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இந்த இறுதி ஊர்வலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ஈரானிய அதிகாரிகள் அவசரக்காலத் திட்டங்களை வகுத்துள்ளனர் என்று ஜெர்மன் நாளிதழான 'டை வெல்ட்' (Die Welt) செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகளின் போது ஈரான் அமைதியைக் கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் பெரும் கூட்டம் திரண்டிருப்பதும் அதிகமான வெப்பநிலையும் சேர்ந்து கூட்டத்தில், ஏதேனும் ஆபத்துகள் நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு கல்லறை அமைப்பதற்கு அதிகாரிகள் தயாராகி வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தெஹ்ரான் முழுவதும் துக்கம் அனுசரிப்பவர்களை ஏற்றிச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள் சேவைகளும், பார்வையாளர்களுக்கான தங்குமிடங்களாக மாற்றப்பட்ட பள்ளிகள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் திட்டமிட்டு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேப்போன்று, கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள மேடையைச் சுற்றி கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மக்கள் 20 நிமிடங்களுக்கு மேல் நிற்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் கடுமையான கோடை வெப்பத்தைத் தணிக்க பிரத்யேக குளிர்விப்பான்கள் மற்றும் தண்ணீர் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த இறுதி சடங்கு ஊர்வலத்தில் சாத்தியமான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனவர்களைக் கையாள்வதற்காக அதிகாரிகள் ஒரு தனிப் பிரிவை உருவாக்கியுள்ளதாகவும், தெஹ்ரானில் இருக்கும் ஒரு கல்லறையில் ஆயிரக்கணக்கான புதிய கல்லறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2020-இல், கெர்மனில் IRGC தளபதி காசெம் சுலைமானியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
முன்னதாக 1989-இல் ரூஹோல்லா கொமேனியின் இறுதிச் சடங்கும் குழப்பத்தில் முடிந்தது, அதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குக்கு பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Iran has prepared 1000 graves for Ayatollah Ali Khameneis funeral procession