திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்; தேசிய நெடுஞ்சாலையில் காரில் பெண்ணை கடத்திய குடும்பத்தினர்; கணவன் கண்ணீர்; நடந்தது என்ன..?
Family members kidnap woman in car on national highway in broad daylight in Trichy
திருச்சி மாவட்டம் சித்தானந்தம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரும், மருங்காபுரி ஒன்றியம் முடுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவள்ளி என்ற பெண்ணும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், இன்று அவர்கள் மணப்பாறைக்கு வந்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் சித்தானந்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதை நோட்டமிட்ட சித்திரைவள்ளியின் தந்தை மலையாண்டி உள்ளிட்டோர் அவர்களை எதிர்பார்த்து திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் பாலப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஏரியாவில், கார்களில் தயாராக காத்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, மகள் சித்திரைவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் அஜித்குமார், தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காகக் கடுமையாக எதிர்த்துப் போராடியுள்ளார்.

அவர் காரின் கண்ணாடிகளை உடைத்து மனைவியை மீட்க முயன்றபோதும், பெண்ணை காரில் ஏற்றி அங்கிருந்து குடும்பத்தினர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதில் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார், மனைவியை கடத்தி விட்டதாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விரைவாக செயல்பட்டு, கடத்திச் செல்லப்பட்ட காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதன் பின்னர் சித்திரைவள்ளியை பாதுகாப்பாக மீட்ட போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அஜித்குமார் அளித்த புகாரில் பெண்ணின் தந்தை மலையாண்டி மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 04 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணத்தை ஏற்க பெண் வீட்டார் மறுத்ததால் இந்த கடத்தல் முயற்சி நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Family members kidnap woman in car on national highway in broad daylight in Trichy