தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கு: 09 வது நபரை கைது செய்துள்ள காவல்துறை..!
Police have arrested the 9th person in the case of bargaining with the TVK MLA
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,மற்றுமொரு நபரான திருநாவுக்கரசுவின் ஓட்டுநரான கிருஷ்ணா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, திருநாவுக்கரசு என்பவர் தொடர்புகொண்டு, தான் ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில், தொடர்பு கொள்வதாக கூறியுள்ளார்.

அதன் போது சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவுள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக நடந்து கொள்ளவேண்டும் என்று திருநாவுக்கரசு கூறியதாகவும், அதற்கு சன்மானமாக 35 கோடி ரூபாய் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, கடந்த 29 ஆம் தேதி, சென்னை காவல் ஆணையரிடம், தவெக எம்.எல்.ஏ. இளையராஜா புகார் அளித்தார். அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு லஞ்சம் தர முயற்சித்ததோடு, தனது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி புகார் அளித்தார்.

குறித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி காவல்துறையினர், அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாக செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். கைதான நரேஷை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சந்தித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே 08 கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பேரம் பேசப்பட்ட விதம், இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் சதித்திட்டத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Police have arrested the 9th person in the case of bargaining with the TVK MLA